ஹைதராபாத்: தெலங்கானாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் அதிகாரப்பூர்வ விழாவில் மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கலந்து கொள்ளமாட்டார் என்று பிஆர்எஸ் அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் தெரிவித்துள்ளார்.
விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று (அக்.1) பிற்பகலில் சாலை, ரயில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில், ரூ.13.500 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ரயில் போக்குவரத்து சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை, மெகபூப்நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இதுகுறித்து சனிக்கிழமை இரவு தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “நாளை அக்.1 மெகபூப்நகரில் நடைபெற உள்ள பாஜக பேரணியில் நான் உரையாற்றுகிறேன். தெலங்கானா மக்கள் மோசமான நிர்வாகத்தால் மிகவும் சோர்வடைந்துள்ளனர். அதே அளவுக்கு அவர்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். பிஎஸ்ஆர் மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற அக்கறை இல்லாத வாரிசு அரசியல் கொண்ட கட்சிகள்” என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, அக்.3ம் தேதி நிஜாமாபாதில் நடக்கும் அடிக்கால் நாட்டு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இதனிடையே, வளர்ச்சி பணிகளில் தொடப்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளை கேசிஆர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சரும், தெலங்கானா மாநில பாஜக தலைவருமான கிஷன்ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தேர்தலைச் சந்திக்க உள்ள தெலங்கானா மாநிலத்திற்கு பிரதமரின் வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.