ODI உலகக் கோப்பை 2023 தொடங்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. 2023 உலகக் கோப்பை தொடர் 46 நாட்களுக்கு 10 மைதானங்களில் நடத்தப்படும். இதில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 9 ஆட்டங்களில் விளையாடும். அதன் பிறகு அரையிறுதி மற்றும் இறுதி போட்டி விளையாடப்படும். இந்தப் போட்டியின் போது மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.
மழை குறுக்கிட்டால் எந்த அணி வெற்றி பெறும்?
ODI உலகக் கோப்பை 2023 அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறும். குரூப் ஸ்டேஜ் போட்டிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரிசர்வ் நாளை வைக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், மழை காரணமாக குரூப் ஸ்டேஜில் எந்தப் போட்டியும் நடைபெறவில்லை என்றால், இரு அணிகளுக்கும் இடையே புள்ளிகள் பிரிக்கப்படும். அதேசமயம், முதல் அரையிறுதி நவம்பர் 15-ம் தேதி மும்பையிலும், 2-வது அரையிறுதி மறுநாள் கொல்கத்தாவிலும் நடைபெறும்.
இந்த இரண்டு அரையிறுதி போட்டிகளுக்கும் ரிசர்வ் டே வைக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான ரிசர்வ் நாளாக நவம்பர் 20ம் தேதி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து நாக்-அவுட் போட்டிகளும் பகல்-இரவு போட்டிகளாக இருக்கும்.
இங்கிலாந்து – நியூசிலாந்து மோதல்
உலக கோப்பை தொடரின் முதல் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில், 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மாபெரும் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் மைதானத்தில் இருப்பார்கள் என யூகிக்கப்பட்டுள்ளது.
போட்டி நடைபெறும் நேரம்
ஒருநாள் உலக கோப்பை போட்டியை இப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துவதால், சில போட்டிகள் இந்திய நேரப்படி காலை 10,30 மணிக்கும், ஒரு சில போட்டிகள் மதியம் 2 மணிக்கும் தொடங்குகின்றன. நாக்அவுட் போட்டிகள் மட்டும் பகல் இரவு போட்டியாக நடைபெற இருக்கிறது.