சிவகங்கை: “காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க மேலாண்மை ஆணையம் உள்ளது. இரு மாநில அரசுகளும் மேலாண்மை ஆணையத்தின் முடிவினை செயல்படுத்த வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறுகையில், “நான் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், எனவே நான் தமிழ்நாட்டின் தேவைக்காக அழுத்தம் கொடுக்க முடியும். அதேபோல கர்நாடகாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அம்மாநிலத்தின் தேவைக்காக அழுத்தம் கொடுப்பார்கள். இந்த விவாகரத்தில் (காவிரி நீர் பங்கீடு) முடிவெடுக்க ஆணையம் உள்ளது. இரண்டு மாநில அரசுகளும் ஆணையத்தின் முடிவினை செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களிடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகிறது. இரண்டு மாநிலங்களுக்கும் முக்கிய நீராதாரமாக காவிரி நதி இருந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் கடந்த 26-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழுவின் 87-வது கூட்டத்தில், “தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் விநாடிக்கு 3000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும்” என பரிந்துரை செய்தது. அதாவது செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என பரிந்துரை செய்யப்பட்டது. முன்னதாக காவிரியில் இருந்து 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
கர்நாடாகாவில் பல இடங்களில் வறட்சி நிலவுவதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகா தெரிவித்து வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழகம், கர்நாடகா அரசு பொய்யுரைப்பதாக குற்றம்சாட்டுகிறது. இதனிடையே ஒழுங்காற்று குழு பரிந்துரையை எதிர்த்து கர்நாடக அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதன்படி,சனிக்கிழமை (செப்.30) கர்நாடக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. பெங்களூரு மாநகரின் குடிநீர் மற்றும் மண்டியா மாவட்ட பாசனத்துக்கான நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கர்நாடகா இருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்துக்கு 3000 கன அடி காவிரி நீரை திறக்க இயலாது. அதனால் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை சீராய்வு செய்ய வேண்டும். வறட்சி காலத்தில் நீர் பங்கீடு தொடர்பான விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மேகேதாட்டுவில் அணைக்கட்ட கோரும் வழக்கை விசாரிக்க வேண்டும்” என கோரியுள்ளது. இதேபோல கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திலும் சீராய்வு மனு தாக்கல் செய்தது. கர்நாடக அரசு கடந்த வாரத்தில் இதே போல காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.