மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ளன. ஆட்சியில் இருக்கும் திமுக, அனைத்து அமைச்சர்களுக்கும் குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்கி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அப்பகுதி தேர்தல் பார்வையாளர்களாக அவர்களை நியமித்துள்ளது. மாவட்ட செயலாளர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேர்தலில் திமுக வெற்றி பெறாத தொகுதிகளின் மாவட்ட செயலாளர்களும், தேர்தல் பார்வையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத மாவட்ட செயலாளர்களும் கண்டிப்பாக நீக்கப்படுவார்கள் என்றும் நேரடியாகவே கூறியுள்ளார்.
அண்ணாமலையின் டெல்லி பயணம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கூட்டணிக் கட்சியாக இருந்த அதிமுக, அண்ணாமலையின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்து பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்துவிட்டது. அரசியல் ரீதியாக அவர் பேசும் பேச்சுக்கள் கூட்டணிக் கட்சியான அதிமுகவை கடும் நெருக்கடிக்குள்ளாக்கியது. அதுமட்டுமல்லாமல் அக்கட்சியின் தலைவர்களையே நேரடியாகவும் அண்ணாமலை விமர்சித்தார். இது விரும்பாத அதிமுக, தேர்தல் களத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என கூறிவிட்டு அக்கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டது.
அதேநேரத்தில் அதிமுகவுக்கு தேசிய தலைமை மீது எந்த அதிருப்தியும் இல்லை என்பதையும் தெரிவித்துவிட்டது. இந்த சூழலில் தான் பாஜகவின் டெல்லி மேலிடம் விடுத்திருக்கும் அழைப்பின்பேரில் புறப்பட்டுச் சென்றுள்ளார் அண்ணாமலை. அதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் பேசிய கருத்துகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை, அதிமுக கூட்டணியில் வெளியேறியதால் பாஜகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு இதை மீண்டும் கூறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டிடிவி தினகரனின் கூட்டணி அறிவிப்பு
பாஜக தலைமையிலான கூட்டணியில் டிடிவி தினகரன் இடம்பெறுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், தேர்தல் நேரத்தில் தான் அறிவிப்போம் என கூறிவிட்டார். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் ஒருபோதும் அமமுக இடம்பெறாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். ஓபிஎஸ் முடிவு பற்றி தனக்கு தெரியாது என்றும், ஒருவேளை அவர் எடப்பாடி பழனிசாமியுடன் கரம் கோர்க்க தயாரானால், நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என கூறியுள்ளார்.