சென்னை: இந்திய சமூகத்தின் உலகளாவிய கலந்துரையாடல் மன்ற அமைப்பின் தொடக்க விழாவில், “மொழி என்பது வெளிப்பாட்டின் கருவி” என்று உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்களின் இந்திய சமூகத்தின் உலகளாவிய கலந்துரையாடல் மன்ற அமைப்பின் (Indian Society for Universal Dialogue -ISUD) தொடக்க விழா பல்கலைக்கழக கலையரங்கத்தில் நேற்று (30 செப்டம்பர் 2023) நடைபெற்றது. இம்மன்ற அமைப்பானது சட்டம் பயிலும் மாணவர்களால் சமகால பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட துவங்கப்பட்டது ஆகும்.
தொடக்க விழாவில் அமைப்பின் தலைவரான ஐந்தாமாண்டு மாணவர் அஸ்வின் சுரேன் அமைப்பின் செயல்பாடு குறித்தும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றும் உரை நிகழ்த்தினார். பல்கலைக்கழக பதிவாளர் ரஞ்சித் ஓமன் ஆபிரகாம் பாராட்டுரை நிகழ்த்தினார். பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ் குமார் பல்கலைக்கழக செயல்பாடு மற்றும் அதன் பிற அமைப்புகள் குறித்தும் தலைமையுரை ஆற்றினார்.
இவ்விழாவில் தலைமை விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் கவுரவ விருந்தினர்களாக மெட்ராஸ் கூட்டணியின் இயக்குநர் பெட்டிரிஷியா தெரி-ஹார்ட் , கோத் நிறுவனத்தின் மண்டல இயக்குநர் டாக்டர் கத்திரினா கார்கன், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஆய்வுகள் துறைத் தலைவர் பேராசிரியர் கோபால்ஜி மால்வியா, ஆஸ்திரேலியா நாட்டின் துணை தூதரக பிரதிநிதி டேவிட் எக்குல்ஸ்டன்ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் பேசிய உச்சநீதிமன்ற வழக்குரைஞர் குரு கிருஷ்ணகுமார், பல நடைமுறை உதாரணங்களுடன் பேச்சுத்திறமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், அவர் இம்மன்ற அமைப்பின் செயல்பாடானது கருத்துக்களின் பரிமாற்றமாகவும், கருத்துக்களின் வளர்ச்சியாகவும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பதாகவும் இருக்க வேண்டும் என்றுரைத்தார்.
அவரை தொடர்ந்து பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர், வார்த்தைகள் மாற்றியமைப்பின் தாக்கம் குறித்து வழக்குரைஞர் நானி பல்கிவாலாவின் கூற்றை எடுத்துக்காட்டி கூறினார். மேலும் அவர் ஆக்ஸ்போர்டு-ன் வாத செயல்முறைகள் குறித்தும் நெறிமுறைகளின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். வெளிப்பாட்டுடன் கூடிய நெறிமுறைகள் உங்களை நீண்ட தூரம் அழைத்துச்செல்லும் என்று தெரிவித்து மொழி என்பது வெளிப்பாட்டின் கருவி என்றும் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் நீதி குறித்தும் வாத நுணுக்கங்களையும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அமைப்பின் தலைவர் India@100series குறித்த அறிமுகத்தை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் India@100series-ன் சின்னத்தை வெளியிட்டு துவக்கி வைத்தனர். இவ்விழாவில் ISUD உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.