சாமானிய வாகன ஓட்டிகளின் பார்வையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கும் சூழலில், அதற்கடுத்த நகர்வாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பேட்டரிகளால் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் பைக்குகள், எலக்ட்ரிக் கார்கள், எலக்ட்ரிக் பேருந்துகள் போன்றவை பயன்பாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன.
இருப்பினும், அவற்றின் விலையும் சாமானியர்களுக்கு அதிகம்தான். அதேசமயம், மத்திய அரசு பேட்டரி வாகன விற்பனையாளர்களுக்கு வரிச்சலுகையும் அளித்துவருகிறது. இன்னொருபக்கம், அவ்வாறான எலக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு என்பது இன்னும் முழுமையாக அனைவரிடத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம்.
ஏனெனில், சாலையோரங்களில் ஆங்காங்கே எலக்ட்ரிக் வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிவது அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. நேற்றுகூட, பெங்களூருவில் நடுரோட்டில் எலக்ட்ரிக் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்களூருவின் ஜே.பி நகர்ப் பகுதியிலுள்ள டால்மியா சர்க்கிள் அருகே நடந்த இந்த திடீர் சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கின்றது. அந்த வீடியோவில், நடுரோட்டில் எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய, கரும்புகை வான் நோக்கி படையெடுக்க, சாலையின் இருபுறத்திலிருந்தும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.