சிவாஜிகணேசன் 96வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், இளையராஜா, கமல்ஹாசன் வாழ்த்து

தமிழ் சினிமா உலகில் நடிகர் திலகம் என அன்புடன் அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்குப் பிறகு வந்த நடிகர்களில் அவருடைய தாக்கம் சிறிதேனும் இருக்கும் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

நடிகர் திலகத்தின் 96வது பிறந்தநாள் இன்று திரையுலகினராலும், அவரது குடும்பத்தினராலும், ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாஜிகணேசன் பிறந்தநாளை முன்னிட்டு இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “கலைத்தாயின் தவப்புதல்வன் அண்ணன் நடிகர் திலகம் அவர்களின் பிறந்தநாள் இன்று. இந்த நாளை உலகமே கொண்டாடுகிறது. அவரை வணங்குவதிலும், அவரின் பாதக் கமலங்களைத் தொட்டு அங்கேயே தலையைக் கிடத்தி வீழ்ந்து நமஸ்காரம் செய்வதிலும் நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்ற சந்தோஷம் எனக்கு இருக்கிறது.

அண்ணனின் புகழ் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. அவர்களின் பிறந்தநாளான இன்று அவருடைய பரிபூரண ஆசி என் மீதும் கலையுலகத்தின் மீதும் இருக்கும், இருக்கும், இருக்கும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க நடிகர் திலகம் அவர்களின் புகழ். கலையுலகிற்கே உயிரான அண்ணனின் புகழ் என்றென்றும் வாழ்க,” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்:
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த “நடிகர் திலகம்”-ன் 96வது பிறந்தநாள் இன்று! நடிப்பின் இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் சிவாஜி கணேசனின் புகழ், தரணியும், தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன்:
பல நூறு மனிதர்களைத் தனக்குள்ளிருந்து எடுத்து உலகத்துக்குத் தந்த ஒற்றை மனிதக் கலைமகன். நடிப்பாக அல்ல, வாழ்க்கையாகக் கலையை முன்வைத்தவர். உலகின் சிறந்த நடிகர்களுக்கு, தமிழ்நாட்டின் பதில் என்று சொல்லத் தக்கவர், மாபெரும் நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று. வாழ்த்துவது நமக்குப் பெருமை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.