மும்பை: மாநிலத்தை டெல்லிக்கு அடிமையாக்கி விட்டு, மகாராஷ்டிராவின் சுயமரியாதை மற்றும் ஒருமைப்பாட்டை காக்க பயன்பட்ட வாக் நாக் ஆயுதத்தைக் கொண்டு வந்து என்ன செய்யப் போகிறீர்கள்? என, சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்பி சஞ்சய் ரவுத் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சத்ரபதி சிவாஜி மகாராஜா பயன்படுத்தியதாக நம்பப்படும் வாக் நாக் எனப்படும் புலி நகம் ஆயுதம் நவம்பர் மாதம் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் நிலையில் சஞ்சய் ரவுத் இவ்வாறு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் கலாச்சாரத்துறை அமைச்சர் சுதி முன்கன்திவார் மற்றும் அவர் துறை சார்ந்த அதிகாரிகள், சிவாஜி பயன்படுத்தியதாக நம்பப்படும் புலி நகம் ஆயுதத்தை இந்தியா கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அக்.3ம் தேதி லண்டன் செல்கின்றனர்.
இந்த நிலையில் புலி நக ஆயுதம் இந்தியா வர இருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா (உத்தவ் அணி) சஞ்சய் ரவுத், “மகாராஷ்டிராவை டெல்லியில் அடகு வைத்து விட்டு, அதன் சுயமரியாதையையும், ஒருமைப்பாட்டையும் காப்பாற்ற பயன்பட்ட ஆயுதத்தை திரும்பக் கொண்டுவந்து என்ன செய்யப்போகிறீர்கள். இது மகாராஷ்டிராவின் பெருமை மற்றும் சுயமரியாதையின் அடையாளமான வாக் நாக்கை அவமதிக்கும் செயலாகும். சிவசேனாவே சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் உண்மையான வாக் நாக்-காகும். அக்கட்சியே அரசின் வழிகளில் வந்த அனைத்து தடைகளையும் எதிர்த்துப் போராடியது” என்று தெரிவித்துள்ளார்.
சிவாஜியின் வாக் நாக் என்றால் என்ன?: கடந்த 1659-ம் ஆண்டு பிஜபூர் சுல்தானின் தளபதியாக இருந்த அஃப்சல் கானை கொல்வதற்கு சிவாாஜி இந்த வாக் நாக் எனப்படும் புலி நகத்தை பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இரும்பினால் ஆன இந்த புலி நகத்தை தன் கைக்குள் மறைத்து வைத்து அஃப்சல் கானை சிவாஜி குத்தி கொன்றிருக்கிறார். அந்த புலி நகம் போன்ற ஆயுதம் பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியான ஜேம்ஸ் க்ராண்ட் டுஃப் வசம் வந்து பின்னர் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்துக்கு பரிசளிக்கப்பட்டு அங்கு பாதுகாக்கப்பட்டது.
இந்த ஆண்டு சத்ரபதி சிவாஜி மகாராஜா முடிசூட்டிக்கொண்ட 350 ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. அதற்காக இங்கு கண்காட்சி நடத்துவதற்காக மூன்று ஆண்டுகளுக்கு வாக் நாக் இந்தியா கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்காக லண்டன் அருங்காட்சியகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதுகுறித்து அருங்காட்சியகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “சத்ரபதி சிவாஜி, ஆஃப்சல் கானை வெற்றி கொண்ட கதை புராணமயமானது. எனவே 350 ஆண்டு கொண்டாட்டத்துக்காக வாக் நாக் எனும் புலி நகங்கள் இந்தியா திரும்புவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அங்கு (இந்தியாவில்) அது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். அந்தக் கண்காட்சி அவர்களின் வரலாற்றில் புதிய ஆய்வுகளை செயல்படுத்தும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.