கரூர்: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தை பயிர் பிரச்சினையாக பார்க்காமல் உயிர்பிரச்சினையாக பார்க்கவேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று (அக். 1ம்தேதி) கரூர் வந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”தமிழகத்தின் இன்றைய முக்கிய பிரச்சினையாக இருப்பது காவிரி. கர்நாடக அரசைப் பொறுத்துவரை டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட நினைக்கிறது. நியாயமாக கொடுக்க வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்காதது கர்நாடக அரசின் தவறு. உரிமையை கேட்கக்கூடிய நிலையில் தமிழகம் உள்ளது. கர்நாடகா சாக்குபோக்கு சொல்லி தட்டிக் கழித்து வருகிறது. தண்ணீர் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றுக்கு கர்நாடக அரசு மரியாதை கொடுக்க தவறுகிறது.
விவசாயிகளின் வாழ்வாதார நன்மை கருதி நடுவர்களாக செயல்படும் மேற்கண்ட அமைப்புகள் கோட்பாடுகளை கொடுத்து வருகின்றனர். தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரில் 50 சதவீதம்கூட 2 முறையும் இக்கோட்பாடுகளில் வழங்கப்படவில்லை. அதற்கு கீழான அளவிலே தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்களை புரிந்து கொள்ளவேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரைக் கூட கொடுக்காமல் கர்நாடக அரசு பிடிவாதமாக உள்ளது. இதனை அரசியலாக பார்க்காமல் பொதுவாக விவசாயிகள் என்ற ஒரே பக்கமாக பார்க்கவேண்டும். அதை உணரவேண்டும். அரசியல் செய்யக்கூடாது. அதை உணர்ந்து அரசுகள் செயல்பட வேண்டும். கூட்டணி அரசியல், வாக்கு வங்கி அரசியல் செய்யக்கூடாது. தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரை சந்தித்து தண்ணீர்பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இதனை பயிர் பிரச்சினையாக பார்க்கக்கூடாது. உயிர் பிரச்சினையாக பார்க்க வேண்டும். இதில் முதல்வர் கவுரவம் பார்க்காமல் கர்நாடக முதல்வரிடம் பேசவேண்டும். விவசாயிகளுக்கு துரோகம் செய்யக்கூடாது. வாக்குவங்கியை பார்க்காமல் விவசாயிகள் வாழ்வாதாரத்தை மட்டுமே பார்க்கவேண்டும். கடந்தாண்டு 2 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்த நிலையில் நிகழாண்டு 1.5 லட்சம் ஏக்கரில் மட்டுமே சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். குறைந்தளவு லாபமே கிடைக்கும் நிலை உள்ளது. விவசாயிகளின் கஷ்ட, நஷ்டத்தை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
காவிரி பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டவேண்டும். கூட்டத்தில் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ளவர்களை மட்டுமே அழைக்கின்றனர். நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற கட்சியைக்கூட அழைப்பதில்லை. குறுகிய காலத்தில் திமுக பெருங்கடனை பெற்றுள்ளது. பாஜக அகில இந்திய அளவில் வலுவான நிலையில் உள்ளது. திமுக ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்தில் அதிமுக தான் பெரியகட்சி. அதிமுக, பாஜக கட்சிகளை சமரசம் செய்யும் பணியில் தமாகா ஈடுபடவில்லை. திமுக அதிருப்தி வாக்குகளை முழுமையாக பயன்படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் செயல்பட்டால் பெருவாரியான இடங்களை பெறமுடியும்” என்றார்.