விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. ரௌடியான இவர், அந்தப் பகுதி மக்களிடம் அடிக்கடி வம்பிழுத்து சண்டையிடுவது, ஆயுதங்களைக் காட்டி மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவாராம். இதனால் அப்பகுதி மக்கள் இவருடன் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், கண்டம்பாக்கம் ரயில் நிலையம் அருகே இன்றைய தினம் சுமார் நான்கு பேர் படுத்திருந்துள்ளனர்.
அங்கு போதையில் வந்த நாராயணசாமி, படுத்திருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். பின்னர், “இந்த ஊரில் என் மீதிருந்த பயம் எல்லோரிடத்திலும் போய்விட்டதா…” என கேட்டு, அங்கு படுத்திருந்தவர்கள்மீது நாட்டு வெடிகுண்டை வீசியிருக்கிறார். நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், பரணிதரன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள், தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், காயமடைந்த பரணிதரனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கைரேகை நிபுணர்களை வரவழைத்த போலீஸார், தடையங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டதோடு, நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தலைமறைவான நாராயணசாமியை தேடி வருகின்றனர். ரயில் நிலையப் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு, ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.