ராஜ்கோட்,
இரானி கோப்பை கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா- ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த ரெஸ்ட் ஆப் இந்தியா கேப்டன் ஹனுமா விஹாரி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி அந்த அணிக்கு தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சனும், மயங்க் அகர்வாலும் நல்ல தொடக்கத்தை தந்தனர்.
ஸ்கோர் 69-ஐ எட்டிய போது அகர்வால் 32 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் விஹாரி 33 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். பொறுமையாக ஆடிய சாய் சுதர்சன் தனது பங்குக்கு 72 ரன்கள் (164 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார். அதன் பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட் சரிந்தன. ஆட்ட நேர முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் சேர்த்துள்ளது. சவுராஷ்டிரா தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் பர்த் புத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.