கொச்சி: கேரள ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த சம்பவம் தீவிரவாத செயல்தான் என என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து விரைவு ரயில் கண்ணூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றிதீ வைத்துள்ளார். தீ மளமளவென பரவியதில் சிலர் உயிர் பிழைப்பதற்காக ரயிலில் இருந்து குதித்துள்ளனர். இதில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும்9 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக கோழிக்கோடு போலீஸார் முதலில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஏப்ரல் 5-ம் தேதிஷாருக் சைபி (27) என்பவர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டார். அவர் டெல்லியைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ஏப்ரல் 17-ம் தேதி இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி கொச்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:
பிரச்சார வீடியோக்கள்: கேரள ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த சம்பவம் தீவிரவாத செயல். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சைபி மட்டுமே இந்த குற்றத்தை செய்துள்ளார். சமூக வலைதளங்களில் தீவிரவாதம் மற்றும் புனிதப்போர் தொடர்பான பிரச்சார வீடியோக்கள் மற்றும் தகவலைப் பார்த்த சைபிக்கு தாமும் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி உள்ளது.
அதேநேரம், டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதிச் சேர்ந்த இவர், தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக கேரளாவுக்கு சென்று இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார். பொதுமக்கள் மனதில் தீவிரவாத அச்சத்தை ஏற்படுத்திவிட்டு, சொந்த ஊர் திரும்பி சாதாரண வாழ்க்கைக்கு திரும்பிவிடலாம் என அவர் திட்டமிட்டுள்ளார். இதன்படி, அங்கிருந்து மகாராஷ்டிராவுக்கு சென்றுள்ளார். ஆனால், அம்மாநிலத்தின் ரத்னகிரியில் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.