ஆசிய விளையாட்டு: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் அரைஇறுதிக்கு முன்னேற்றம்- ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தார்

ஹாங்சோவ்,

பர்வீன் அபாரம்

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வரும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலத்தை கைப்பற்றி பிரமிக்க வைத்தது.

பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு வலுசேர்த்த துப்பாக்கி சுடுதல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா 7 தங்கம் உள்பட 22 பதக்கங்களை அள்ளி குவித்து சாதித்து இருக்கிறது.

பெண்களுக்கான குத்துச்சண்டையில் 57 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சிதோராவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவருக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் கிடைக்கும். மேலும் 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தையும் உறுதி செய்தார். ஏற்கனவே நிகாத் ஜரீன் (50 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ), லவ்லினா (75 கிலோ), நரேந்தர் பெர்வால் (92 கிலோ) ஆகியோரும் தங்களது பிரிவில் ஒலிம்பிக் வாய்ப்பை எட்டியிருக்கிறார்கள்.

கூடைப்பந்து போட்டியில் பெண்களுக்கான ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியா 53-111 என்ற புள்ளி கணக்கில் சீனாவிடம் சரண் அடைந்தது. கைப்பந்தில் இந்திய பெண்கள் அணி (ஏ பிரிவு) ஒரு லீக் ஆட்டத்தில் 9-25, 9-25, 9-25 என்ற என்ற நேர் செட்டில் சீனாவிடம் சறுக்கியது.

ஸ்குவாஷில் வெற்றி

ஸ்குவாஷ் போட்டியில் கலப்பு இரட்டையரில் (ஏ பிரிவு) இந்தியாவின் தீபிகா பலிக்கல்-ஹரிந்தர் பால் சிங் சந்து ஜோடி 11-2, 11-5 என்ற நேர் செட்டில் தென்கொரியாவின் ஹவாயோங்- யோ ஜஜின் இணையை தோற்கடித்தது. இதே போல் அனஹத் சிங்- அபய் சிங் ஜோடியும் தங்களது ஆட்டத்தில் வெற்றி கண்டது.

பெண்கள் ஆக்கியில் ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, தென்கொரியாவை சந்தித்தது. பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணியில் நவ்னீத் கவுரும், கொரியா அணியில் சோவும் கோல் போட்டனர். 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் நாளை ஹாங்காங்குடன் மோதுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.