நெல்லை மாவட்டம், திருப்பணிகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர், நெல்லை டவுன் கீழரதவீதியிலுள்ள ஃபேன்சி ஸ்டோர் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நெல்லையபர் கோயிலின் கீழரதவீதியில் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதியில், அவரை மர்ம நபர் வெட்டிப் படுகொலைசெய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஃபேன்சி ஸ்டோரில் வேலை செய்துவந்த இளம்பெண், பணி நேரத்தில் அருகிலிருக்கும் குடோனிலிருந்து கடைக்குத் தேவையான பொருள்களை எடுத்து வருவதற்காகச் சென்றிருக்கிறார். நீண்ட நேரமாக அவர் கடைக்குத் திரும்பி வராததால் சந்தேகமடைந்த கடையின் ஊழியர்கள், குடோனுக்குச் சென்று பார்த்திருக்கின்றனர். அங்கு அவர் ரத்தம் சொட்டிய நிலையில் கிடந்ததைப் பார்த்து, அச்சமடைந்து நெல்லை டவுன் போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர்.
நெல்லை டவுன் உதவி ஆணையாளர் சுப்பையா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, இளம்பெண் அதே இடத்தில் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டிருக்கின்றனர். அதையடுத்து, அவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸார், எதற்காக, யாரால் இந்தக் கொலை நடந்தது என்பது குறித்த விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.
அந்தப் பகுதியிலுள்ள சிலரிடம் நடத்திய விசாரணையில், இளைஞர் ஒருவர் அவசரமாக அங்கிருந்து சென்றதைப் பார்த்ததாகத் தெரிவித்திருக்கின்றனர். அதனால் ஒருதலைக் காதல் விவகாரம் காரணமாக யாராவது இளம்பெண்ணைப் பின்தொடர்ந்து வந்து கொலைசெய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, கொலையாளியைத் தேடும் பணி நடக்கிறது.
வணிக நிறுவனங்களும் ஆள் நடமாட்டமும் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இது தொடர்பாக கடையில் பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் உயிரிழந்த இளம்பெண்ணின் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு பல்வேறு தகவல்களைத் திரட்டி வருகிறார்கள்.
இதனிடையே, கொலையாளி யார் என்பதைக் கண்டறிந்து கைதுசெய்ய வேண்டும் என உயிரிழந்த இளம்பெண்ணின் உறவினர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த படுகொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் சமரசப்படுத்தி அனுப்பிவைத்தனர். இருப்பினும் அந்தப் பகுதியில் பதற்ற்ம் நீடிக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.