ஜெய்பூர்: ராஜஸ்தானின் வளர்ச்சி என்பது தனது அரசின் மிகப்பெரிய முன்னுரிமை என்றும், அது மாநிலத்தின் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைப்பதில் கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.
ராஸ்தான் மாநிலம் சித்தோர்காரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.7,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி திங்கள் கிழமை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர், “இன்று அர்ப்பணிக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். ராஜஸ்தானில் அதிவேக விரைவு சாலைகள், விரைவு சாலைகள், ரயில்வே போக்குவரத்து போன்ற நவீன உள்கட்டமைப்புகளை வளர்ப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. ராஸ்தானில் கடந்த காலத்தின் பாரம்பரியம், நிகழ்காலத்தின் வலிமை, எதிர்காலத்தின் சாத்தியக்கூறுகள் ஆகிய மூன்றும் உள்ளன. ராஜஸ்தானின் இந்த ‘திரிசக்தி’நாட்டின் வலிமையை அதிகப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.
ராஸ்தானில் பிரதமர் இன்று தொடங்கி வைத்த திட்டத்தில், ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் நத்துவாரா (ராஜ்மந்த்)வில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா வளர்ச்சி, நத்துவாராவில் உள்ள சுற்றுலா விளக்கம் மற்றும் கலாச்சார மையம், கோடாவில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவன (ஐஐஐடி) வளாகத்தின் நிரந்தர கட்டிடம் ஆகியவைகளும் அடங்கும். இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததும் பிரதமர் மோடி மாவட்ட பாஜக ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.