சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு டெங்கு; நோய்த் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்திய சுகாதாரத்துறை!

தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளுக்குநாள் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டும் நாள்தோறும் 20 முதல் 30 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

ஆணையர் ராதாகிருஷ்ணன்

கடந்த மாதம், டெங்கு காய்ச்சலின் தீவிரத்தால் சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்‌ஷன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சிறுவனின் வீட்டுக்கு நேரில்சென்று பெற்றோருக்கு ஆறுதல் சொல்லியதுடன், மதுரவாயல் பகுதியில் உடனடி சுகாதார ஆய்வையும் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி முழுவதும் டெங்கு விழிப்புணர்வு, கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் தடுப்புப் பணிகளையும் விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று, டெங்கு தடுப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்.

ஆணையருக்கு டெங்கு:

இந்த நிலையில், ஆணையர் ராதாகிருஷ்ணனுக்குக் காய்ச்சல் ஏற்பட்டு, அவர் கடந்த ஒரு வாரமாக எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். மேலும், செப்டம்பர் 29-ம் நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், ராதாகிருஷ்ணனுக்குக் காய்ச்சல் அதிகரிக்க, நேற்று மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, வீட்டிலிருந்தபடியே மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், வழக்கம்போல விரைவில் தனது பணிக்குத் திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆய்வில் ஆணையர்

இதனால், சென்னை மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர். ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் 600-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டிருக்க, திருப்பத்தூரைச் சேர்ந்த அபிநிதி என்ற 5 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்திருக்கிறார். இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை, மக்கள் கவனமாக சுகாதாரமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கும் சுகாதாரத்துறை, டெங்கு தடுப்புப் பணிகளில் இன்னும் தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது.

ஆணையர்

களத்தில் சுகாதாரத்துறை:

டெங்கு காய்ச்சலின் தீவிரத்தை மட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் சேர்த்து சுமார் 1,000 இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. குறிப்பாக, சென்னையில் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் டெங்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ஸ்டான்லி என அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கெனத் தனி வார்டு அமைத்து உடனடி சிசிக்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள், நகர் நல அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது. மறுஉத்தரவு வரும் வரை டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம்களை நடத்தவேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், டெங்கு காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டிருப்பதோடு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகள், தனியார் ஆய்வகங்கள் போன்றவை டெங்கு காய்ச்சல் விவரங்களை சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறது. அவர்கள் தகவல் அளிக்கத் தவறும்பட்சத்தில், தொற்று நோய்த் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சுகாதாரப் பணியில் பணியாளர்கள்

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரையில், தற்போது கொசு ஒழிப்பு பணிக்கென 954 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்களும், 2,324 ஒப்பந்தப் பணியாளர்களும் என மொத்தம் 3,278 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் மருந்து தெளிப்பான்கள், பவர் ஸ்ப்ரேயர்கள், புகைப்பரப்பும் இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் உள்ளிட்ட தடுப்பு உபகரணங்கள் மூலம் கொசுப்புழுக்கள் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.