சீனாவின் ஹாங்ஸு நகரில் கோலாகலமாக நடந்துவருகிறது 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள். பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை குவித்துவருகிறது இந்தியா. பதக்கபட்டியலில் மேலும் ஒரு தங்கத்தைச் சேர்ப்பதற்கு ஏற்றவாறு ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. நாளை தனது முதல் போட்டியில் களமிறங்குகிறது இந்தியா கிரிக்கெட் அணி.
2010, 2014-ம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தாலும் பிசிசிஐ அதில் பங்கேற்க எந்த அணியையும் அனுப்பிவைக்கவில்லை. இம்முறைதான் முதல்முறையாக ஆண்கள், பெண்கள் என இரு அணிகளையும் அனுப்பிவைத்திருக்கிறது.
ஆடவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாகத் தகுதிபெற்றன. தகுதிச்சுற்று போட்டிகளிலிருந்து நேபாளம், ஹாங்காங், மலேசியா ஆகிய அணிகள் தகுதிபெற்றிருக்கின்றன.
எந்தெந்த அணிகள் காலிறுதியில் மோதும் என்ற விவரமும் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அணி நேபாள அணியை முதல் காலிறுதியில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நாளை இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்குத் தொடங்குகிறது. போட்டிகள் செஜாங் பல்கலைக்கழக கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. சிறிய மைதானம் என்பதால் இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் அதிகப்படியான ரன்களை அடிக்க வாய்ப்புகள் அதிகம். இங்குதான் நேபாளம் தகுதிச்சுற்றில் 314 ரன்கள் அடித்து அனைவரையும் மிரளவைத்தது.
இந்தியா அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் தீப்.
மற்ற காலிறுதிப் போட்டிகளில் பாகிஸ்தான் ஹாங்காங்கையும், இலங்கை ஆப்கானிஸ்தானையும், வங்கதேசம் மலேசியாவையும் எதிர்கொள்கின்றன. பங்கேற்ற முதல்முறையே தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியிருக்கிறது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. ஆடவர் அணியும் எளிதில் தங்கம் வெல்லும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாக இருக்கிறது!