சென்னை: ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்த ஒடிசா இளைஞரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை உள்ளது. அங்கு எப்போதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். அனுமதி பெற்றவர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும். இந்நிலையில், இளைஞர் ஒருவர் ஆளுநர் மாளிகையின் தர்கா கேட் மீது ஏறி உள்ளே நுழைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரை மடக்கி பிடித்தனர்.
பின்னர், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். தொடர் விசாரணையில் பிடிபட்டவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சு பிரிசிகா (32) என்பதும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கிண்டி போலீஸார் அந்த இளைஞரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் கிண்டி ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்த இளைஞரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.