"பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை" – பாஜக கூட்டணி முறிவு குறித்து முதல்முறையாக பேசிய இபிஎஸ்

சேலம்: பாஜக கூட்டணி முறிவு என்பது பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக நீடித்துவந்த அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது. அதிமுக தலைவர்கள் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே இரண்டரை ஆண்டுகளாக நீடித்த உரசல்கள், விமர்சனங்கள், கருத்து மோதல்கள் போன்றவற்றைக் காரணம் காட்டி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது அதிமுக. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவின் இந்த விலகல் உறுதியானதா என்னும் கேள்வி எழுந்திருந்தது.

ஏனென்றால் பாஜக தேசியத் தலைமையும், அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமியும் எந்தவித விளக்கங்களும் இதுதொடர்பாக தரவில்லை. இதனால் விவாதங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சேலத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து முதல்முறையாக பேசினார்.

அதில், “வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்படும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என்பது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு. இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலேயே ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

தொண்டர்களின் உணர்வுகளின் அடிப்படையில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்வது என முடிவெடுக்கப்பட்டது, இது பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு.

கூட்டணி முறிவு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தையும் கூறவில்லை என கூறுகிறார்கள். ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகிறது என்றால் அது அனைவரின் சம்மதத்துடன் எடுக்கப்பட்ட முடிவு என்பதே எண்ணிக்கொள்ள வேண்டும்” என்று பேசியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.