Doctor Vikatan: ஏசி அறையில் அதிக நேரமிருந்தாலோ, சினிமா தியேட்டர்களில் படம் பார்த்தாலோ தலைவலிக்கிறது, சோர்வாகவும் உணர்கிறேன். காரணம் என்ன?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்
போதுமான வெளிச்சமோ, காற்றோட்டமோ இல்லாமல் ஏசி செய்யப்பட்ட சூழலில் நீங்கள் வேலை செய்யும்போது அது ‘சிக் பில்டிங் சிண்ட்ரோம்’ ( The sick building syndrome -SBS) என்ற ஒன்றை ஏற்படுத்தும். தலைவலி, வறட்டு இருமல், தலைச்சுற்றல், வாந்தி, கவனச்சிதறல், களைப்பு, வாசனைகளைக் கண்டால் சென்சிட்டிவ் ஆவது என அதன் அறிகுறிகள் எப்படியும் இருக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் வேலை செய்வது என்பது இன்ஃபெக்ஷனுக்கான ரிஸ்க்கையும் அதிகரிக்கும்.
ஏசி செய்யப்பட்ட அறையில் ஈரப்பதம் முற்றிலுமாக உறிஞ்சப்பட்டுவிடும். அதன் விளைவாக உங்கள் சருமமும் நீர்ச்சத்தை இழந்து வறண்டு போகும். சுற்றுச்சூழலில் ஈரப்பதமே இல்லாத நிலை, உங்கள் கண்களையும் வறண்டுபோகச் செய்யும். அதனால் உங்கள் கண்களில் எரிச்சல், அரிப்பு ஏற்படுவதோடு, பார்வையும் மங்கத் தொடங்கும்.
2018-ல் நடத்தப்பட்ட ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வின் படி, ஏசி செய்யப்பட்ட அறைகளில் வசித்த மாணவர்கள், அறிவாற்றல் திறன் தொடர்பான டெஸ்ட்டுகளில் சரியாகச் செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, ஏசி செய்யப்பட்ட அறைகளில் வசிப்போருக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அதிகம் பாதிப்பதும் ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. (உதாரணத்துக்கு மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள்) இயற்கையான காற்று வீசும் சூழல்களில் வசிப்போருக்கு இந்தப் பிரச்னைகள் குறைவு என்பதும் தெரிய வந்திருக்கிறது.
ஏசி செய்யப்பட்ட அறைகளில், அடிக்கடி சுத்தம் செய்யப்படாத அல்லது முறையாகப் பராமரிக்கப்படாத கம்ப்யூட்டர்களில் வேலை செய்யும்போது, தலைவலி, ஒற்றைத் தலைவலி பிரச்னைகள் பாதிக்கவும் வாய்ப்புகள் அதிகம். சுத்தமில்லாத இண்டோர் சூழலில் வேலை செய்வோரில் 8 சதவிகிதம் பேருக்கு மாதத்தில் ஒன்று முதல் மூன்று நாள்கள் தலைவலி பாதிப்பதும், 8 சதவிகிதம் பேருக்கு தினசரி தலைவலி பாதிப்பதும் ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஏசி செய்யப்பட்ட சூழலில் அதிக நேரத்தைச் செலவிட்டுப் பழகுவோருக்கு வெப்பமான சூழலை சமாளிப்பதில் அதிக சிரமம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தவிர்க்கவே முடியாத சூழலில் ஏசியில்தான் இருந்தாக வேண்டும் என்ற நிலையில், ஏசியை அவ்வப்போது சுத்தம் செய்து முறையாகப் பராமரிக்க வேண்டியதும் முக்கியம். அதன் மூலம் ஒவ்வாமை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். ஏசியின் அமைப்பானது எளிதில் கிருமிகளின் தாக்கத்துக்கு இடமளிக்கக்கூடியதாகவே இருக்கும். எனவே அதை உணர்ந்து அவ்வப்போது அதைப் பழுதுபார்ப்பதும் பராமரிப்பதும் அலர்ஜி பாதிப்பிலிருந்து உங்களைக் காக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.