ஒவ்வொரு குழந்தையும் அன்புமயமாகவே பிறக்கிறது. அடிபட்ட ஆட்டையும், நொண்டி செல்லும் நாயையும் கண்டு பச்சாதாபப்படுகிறது. தாய் கண்ணீர் சிந்தினால் அதுவும் அழுகிறது.
நாம்தான் மதிப்பெண்கள் மட்டுமே முக்கியம் என்று குழந்தைகளைச் சுயநலம் உள்ளவர்களாகச் சிதைத்து விடுகிறோம். படிப்பதைத் தவிர வேறு எதைச் செய்தாலும் நேர விரயம் என்று அடிப்பது வரை சென்று விடுகிறோம்.
உலகம் புத்தகங்களைத் தாண்டியது என்பதைப் புரிய வைக்க வேண்டியவர்கள் நாம்தான். ஆங்காங்கே புத்தகப்பையை மட்டும் சுமக்காமல் கண்களில் கருணையையும், கைகளில் பரிவையும் சுமந்து செல்கின்ற உன்னதக் குழந்தைகள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களை உச்சி முகர்ந்தால்தான் சமுதாயம் உச்சத்தை அடைய முடியும்.
இயற்கையை நேசிப்பது, மானுடத்தை உற்றுக் கவனிப்பது, சக குழந்தைகளின் காயங்களுக்கு களிம்பு தடவுவது, ஒரு புல்லுக்குக்கூட வலிக்காமல் நடப்பது, படிப்பில் தடுமாறும் வகுப்புத் தோழனுக்கு ஊன்றுகோலாய் உதவுவது என்று அன்பு ததும்பும் நடவடிக்கைகளின் முதிர்ச்சியால் நம்மை ஆனந்த அதிர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் மாணவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
நாம் மதிப்பெண்களை மட்டுமே அங்கீகரிக்கிறோம். பதக்கங்களுக்கு மட்டுமே பரவசப்படுகிறோம். பரிசுகளை நோக்கியே அவர்களைத் தயார்படுத்துகிறோம். எந்த வயதிலும் விழிப்புணர்வோடு ஊன்றிப் படித்தால் வெற்றிபெற்று விடலாம். நாற்பது வயதில் முயன்று நோபல் பரிசு பெற்றவர்கள் உண்டு. ஐம்பது வயதில் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள் உண்டு. ஆனால் மனிதநேயம் முளையிலேயே துளிர்த்தால்தான் முதுமையிலும் மணம் பரப்ப முடியும்.
‘நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே‘ என்பது புறநானூற்றுப் பாடல். தாறுமாறாக முளைக்கும் கிளைகளைக் கத்தரித்துச் சீராக வளர்ப்பதுபோல பழக்கங்களையும் செதுக்க வேண்டிய பொறுப்பு இன்று அரசுக்கு மட்டும் அல்ல, பொதுவெளியில் இருக்கும் அனைவருக்கும் உண்டு.
இளம் வயதில் எதிர்பாராதவிதத்தில் மடியில்விழுகிற பாராட்டு, கண்களில் ஒற்றிக்கொள்ளும் பரவசத்தை ஏற்படுத்தி விடுகிறது. அச்சு ஊடகத்தில் மெச்சத்தகுந்த செயல் என்று கைதட்டி அறிவித்தால் அது பிறவிப் பெருங்கடலைக் கடந்த பேரின்பத்தை ஏற்படுத்தும்.
எண்ணற்ற குழந்தைகள் ஒரு மொட்டு மலர்வதைப்போல, ஒரு சிட்டு பறப்பதைப்போல மவுனமாகப் பரோபகாரம் செய்கின்றனர். அவர்களுக்கு அது ஒப்புரவு என்றுகூட தெரியாமல் செய்யப்படுகிற உள்ளத்துப்புரவு அது.
இயல்பாக இதயத்தால் உந்தித்தள்ளப்படுகிற உணர்வால் இவர்கள் இந்த அற்புதச் செயல்களைச் செய்து வருகிறார்கள். மலர்கள் மலர்ந்தால் தேனீக்கள் வருவதைப்போல உள்ளுணர்வால் நிகழும் இந்தச் செயல்களை எல்லா பெற்றோரும் அங்கீகரிக்கிறார்களா என்பதுகூட ஐயமே. ஆனால், இத்தகைய மனிதப் பண்புகள்தாம் அவர்களை விண்ணளவுக்கு வியந்துபார்க்க வைக்கும் வித்தகத்தைச் செய்யப் போகின்றன என்பதைப் பலரும் அறிவதில்லை.
நாம் செல்கிற திசை சரிதானா என்கிற குழப்பத்தை இத்தகைய நல்லுள்ளங்கள் அவ்வப்போது அடைவதுண்டு. கழுத்தறுக்கும் போட்டியில் அவர்கள் தொலைந்து விடாமல் இருக்க, கைவிளக்காய் நாம் ஆற்ற வேண்டிய நற்செயல் ஒன்று உண்டு. அது அவர்கள் முதுகை அவ்வப்போது தட்டிக்கொடுத்து, அவர்கள் வழியில் இன்னும் பலரைப் பயணம் செய்ய ஊக்குவிப்பதே.
இவர்கள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் இடம்பெறுவது இன்னும் மனிதநேயம் பிஞ்சு உள்ளங்களில் எஞ்சி இருக்கிறது என்பதை நமக்கும் உணர்த்தி, நம் இதயத்திலும் நம்பிக்கைத் தளிர்களைத் துளிர்விடச் செய்வதற்கே!
(‘இன்றைய மாணவ சமுதாயத்தின் மனதில் விதைக்கும் நற்சிந்தனைகளே நாளைய நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கும்’ என்பதில் அக்கறை கொண்ட ஆளுமையாளரும், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு, ஐஏஎஸ். மாணவர்களின் எண்ண வயல்களில் விதைத்திருக்கும் நற்சிந்தனைகளே, நாளைய நன்னடைக்கான படிக்கட்டுகளாக இங்கே பதிவாகியுள்ளன.)
வெ.இறையன்பு, ஐஏஎஸ்