சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது – டிடிவி தினகரன் 

சென்னை: “அரசு சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்துப் பிரிவினருக்கும் நியாயமாக சென்றடைவதை உறுதிபடுத்தவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு வழக்கில் வலுவான ஆதாரங்களை முன்வைப்பதற்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசர அவசியமாகிறது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவினருக்கும் போதிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்வதற்கான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியும் என்பது பிஹார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 57வது வாக்குறுதியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கீட்டை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எடுத்திட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என குறிப்பிட்டிருக்கும் நிலையில் அது தொடர்பாக எவ்வித முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி குலசேகரன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு உரிய கால அவகாசத்தை, அடுத்து வந்த திமுக அரசு நீட்டிக்காத காரணத்தினால் அந்த ஆணையமும் செயலிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசு சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்துப் பிரிவினருக்கும் நியாயமாக சென்றடைவதை உறுதிபடுத்துவதற்காகவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு வழக்கில் வலுவான ஆதாரங்களை முன்வைப்பதற்காகவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசர அவசியமாகிறது.

எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது என்பதை உணர்ந்து, பிஹார் மாநிலத்தைப் போலவே தமிழகத்திலும் போதுமான நிதியை ஒதுக்கி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என தமிழக அரசை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.