இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். கடல் இருக்கும் ஊர்களில் விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பார்கள். அது போன்ற ஒரு நிகழ்வு குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் நடந்திருக்கிறது. விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது, அது கரைக்கப்படுவதைப் பார்ப்பதற்கு லகான் தேவிபூஜக் என்ற 13 வயது சிறுவன் சென்றிருக்கிறான்.
எல்லோரும் ஆர்ப்பாட்டமாக அரபிக்கடலில் விநாயகர் சிலையைக் கரைக்கும்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் லகான் தேவிபூஜக் கடல் அலையில் சிக்கியிருக்கிறான். அதிலிருந்து மீள முடியாமல், கடல் கணக்கில் சுமார் 18 மைல் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறான். அதிசயமாகக் கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலையின் மரப்பகுதி ஒன்றைப் பற்றிக்கொண்டு, அதில் சுமார் 24 மணி நேரம் மிதந்திருக்கிறான்.
இந்த நிலையில், கடலில் மீன் பிடிக்கச் சென்ற நவ்சாரி பகுதியைச் சேர்ந்த ரசிக் டாண்டேல் என்ற மீனவர், சிறுவனைப் பார்த்து பத்திரமாக மீட்டு வந்திருக்கிறார். கரைக்கு வந்தவுடன் காவல் நிலையத்துக்குத் தகவலளிக்கப்பட்டது. உடனே சிறுவனை மீட்ட காவல்துறையினர், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, சிறுவனை அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். சுமார் 24 மணி நேரம் கடலில் மிதந்த சிறுவன் தொடர்பான தகவல், குஜராத் மாநிலத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.