நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையில் அஜித்தின் ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் த்ரிஷா நடிக்கிறார் என்றும் முன்பே சொல்லியிருந்தோம். இந்நிலையில் ‘விடா முயற்சி’யின் படப்பிடிப்பு நாளை துபாயில் தொடங்குகிறது என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டிருந்தது. இது குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி..
அ.வினோத்தின் ‘துணிவு’ படப்பிடிப்புக்குப் பின்னர், ‘தடம்’, ‘கலகத்தலைவன்’ படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், ‘விடா முயற்சி’. இதன் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாகவே அப்போது தொடங்கும் இப்போது தொடங்கும் என்ற நிலை இருந்து வந்தது. அஜித்தின் ஐரோப்பிய நாடுகள் சுற்றுப்பயணம் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே வந்தது. அதையும் தாண்டி அவர் துபாயில் செட்டில் ஆகப்போகிறார்; லண்டனில் வீடு பார்த்துக் குடியேறுகிறார் என்பது போன்ற செய்திகள் எழுந்தன.
ஆனால், அஜித் தனது லண்டன் பயணத்தை முடித்த கையோடு மகிழ்திருமேனியிடம் முழுக்கதையும் கேட்டுவிட்டார். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில் ‘விஸ்வாசம்’ போல ஒரு எமோஷனல் போர்ஷனும் உள்ளது என்கிறார்கள். படத்தில் த்ரிஷா, ஆரவ், சஞ்சய் தத் எனப் பலரும் உள்ளனர். நடிகர்கள் தேர்வை மகிழ்திருமேனியின் சாய்ஸிலேயே விட்டுவிட்டார் அஜித்.
இந்நிலையில் அஜித்தின் ‘விடா முயற்சி’ அஜர்பைஜான் நாட்டில் நாளை படப்பிடிப்பு தொடங்குகிறது என்கிறார்கள். அதைத் தொடர்ந்து துபாய், அபுதாபி, சென்னை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது. தொடர்ந்து 50 நாட்கள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது.
‘பில்லா’வில் அஜித்திற்கு காஸ்ட்யூமை கவனித்த அனுவர்தன், இதில் காஸ்ட்யூமை கவனிக்கிறார். செம ஸ்டைலிஷான அஜித்தைப் பார்க்கலாம் என்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். அஜித்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக மாறிவிட்ட நீரவ்ஷா, ஒளிப்பதிவு செய்கிறார். நாளை தொடங்கும் படப்பிடிப்பு நான்ஸ்டாப் கொண்டாட்டமாக தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறும் என்றும் சொல்கிறார்கள்.