“சீமான் கடைசியாக எப்போது காவிரியை பார்த்தார்?” – மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி

சாத்தூர்: “தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி இன்னும் முறியவில்லை. அண்ணாமலைக்காக கூட்டணி முறிந்ததாக அதிமுகவினர் வெளிவேஷம் போடுகிறார்கள்” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார். மேலும், சீமானுக்கும் சில கேள்விகளை அவர் எழுப்பினார்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.டி.ரெட்டியபட்டியில் அங்கன்வாடி மையத்தையும், குண்டாயிருப்பு கிராமத்திலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களை சந்தித்து மாணிக்கம்தாகூர் எம்.பி. இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ”அரசு அலுவலகங்களில் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்காமல் அரசு நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி தேசியக் கட்சி. சில மாநிலங்களில் சில கட்சிகள் ஓலமிடுவதைப் போல சீமான் ஓலமிடுகிறார். தேசிய கட்சிகளை முன்னுக்குப் பின் முரணாக பேசிவருது சீமானின் வேலையாக உள்ளது. இவர் பாஜகவின் மத அடிப்படையிலான கோட்பாடுகளை மறைமுகமாக அரசியலில் கொண்டுவருகிறார். தமிழக மக்கள் எப்போதுமே சீமான் போன்றவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. நதிநீர் ஆணையம் கூறும்போது ஒரு நாள் கூட நிறுத்தாமல் கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்துவிடுகிறது. இதை சீமான் போன்றோர் புரிந்துகொள்ள வேண்டும். சென்னையிலிருந்து அரசியல் பேசாமல் காவிரியை சென்று பார்க்க வேண்டும்

சீமான் கடைசியாக எப்போது காவிரியைப் பார்த்தார்? காவிரி பிரச்சினையை அரசியலாக்குவது பாஜகதான். கர்நாடகத்தில் ஆளும் கட்சி காங்கிரஸ். அங்கு 5 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது. குடும்பத்தில் பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக மொழி வெறியர்களைத் தூண்டிவிட்டு நாடகம் நடத்துகிறது.

இங்கிருந்து சீமான் போன்றோர் காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று பேசுவது அபத்தமானது. எங்களைப் பொறுத்தவரை கர்நாடக பாஜகவினர் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். அதற்காக சீமான் குரல் கொடுப்பாரா?

தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி இன்னும் முறியவில்லை. அண்ணாமலைக்காக கூட்டணி முறிந்ததாக அதிமுகவினர் வெளிவேஷம் போடுகிறார்கள். மோடி பிரதமராக வரக்கூடாது, அதற்காக வாக்குக் கேட்கிறோம் எனக் கூற எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவினரும் தயராரா?” என மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி எழுப்பினார். அப்போது, விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் செல்வக்கனி, கணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் காளியப்பன், ராஜ்மோகன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.