ஹைதராபாத்: “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விரும்பினார். ஆனால். அவரின் செயல்பாட்டால் நான் அதை நிராகரித்தேன்” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தெலங்கானாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றபோது, சந்திரசேகர ராவ்வுக்கு ஆதரவு தேவைப்பட்டது. தேர்தலுக்கு முன் நான் தெலங்கானா வரும்போதெல்லாம், விமான நிலையத்துக்கு வந்து என்னை வரவேற்ற அவர், பின்னர் திடீரென அதை நிறுத்திவிட்டார். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு, டெல்லிக்கு என்னைச் சந்திக்க வந்த கே.சி.ஆர் தேசிய ஜனநாயக ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு, டெல்லியில் என்னைச் சந்திக்க வந்த சந்திரசேகர ராவ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்புவதாக கூறினார். மேலும், தனக்கு ஆதரவு அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். ஆனால் அவரின் செயல்பாடுகளால் அதை நிராகரித்தேன்” என்று கூறினார்.
பாரதிய ராஷ்ட்ரிய சமிதி மறுப்பு: இதுதொடர்பாக பிஆர்எஸ் செய்தித் தொடர்பாளர் கிரிஷாங்க் பேசுகையில், “அரசியல் ஆதாயங்களுக்காகப் பொய்களை பேசும் பிரதமர் மோடி எந்த நிலைக்கும் செல்லலாம். அடுத்த முறை முதல்வர், பிரதமரை சந்திக்கச் சென்றால், அவர் ஒரு கேமராவை எடுத்துக் கொள்ள வேண்டும், ஏனென்றால் அரசியல் ஆதாயங்களுக்காக பொய்களை பேசும் பிரதமர் மோடி, எந்த நிலைக்கும் செல்வார்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பேரணி: தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேசுகையில், “விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும், தெலங்கானா அரசு உடைத்துவிட்டது” என்றும் கடுமையாக குற்றம்சாட்டினார்.