ஐடி துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ZOHO ஶ்ரீதர் வேம்பு தந்த எச்சரிக்கை!

ஆண்டுதோறும் நம் நாட்டிலிருந்து கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் என என்ஜினியரிங் படிப்பினைப் படித்து, ஐ.டி வேலை தேடிவரும் என்ஜினியர்கள் பல லட்சம் பேர். இவர்களுக்கு சில ஆண்டுகளில் ஐ.டி வேலைவாய்ப்பு மிக எளிதில் கிடைக்கும். கடந்த ஆண்டில் எல்லா ஐ.டி நிறுவனங்களும் லட்சக் கணக்கில் புதிதாகப் படித்து வந்தவர்களுக்கு வேலை தந்தது; ஆனால், இந்த ஆண்டில் நிலைமை அப்படி இல்லை. அமெரிக்கா உள்பட உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கமானது நம் நாட்டில் ஐ.டி துறையில் புதிய வேலைவாய்ப்பினைப் பெருமளவில் குறைத்திருக்கிறது.

ஜிடிபி

இந்த நிலையில், நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு, கடந்த செப்டம்பர் மாதத்தில் தனது நிறுவனத்தின் வருவாய் மந்தமான நிலையைக் கண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

“பல நாடுகளில் இருந்து வருவாய் ஈட்டும் நிறுவனமான எங்கள் நிறுவனத்தின் நிலையே இப்படி இருக்கும்போது இது உலகப் பொருளாதாரத்திலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன், இது ஒரு எச்சரிக்கை” என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நிதியாண்டில் ஜோஹோ நிறுவனத்தின் வருடாந்திர வருவாயானது ஒரு பில்லியன் டாலரை தாண்டிய நிலையில், நிகர லாபம் 43% அதிகரித்து ரூ.2,700 கோடியைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் 2022-ம் ஆண்டிற்கான முதலீடுகள் 3,406 மில்லியன் டாலராக இருந்தது. அது நடப்பு 2023-ம் ஆண்டின் முதல் பாதியில் கிட்டத்தட்ட 81% குறைந்து 635 மில்லியனாக இருக்கிறது.

இந்தியாவின் நிலை இப்படி இருக்க, உலகப் பொருளாதாரத்தை பார்க்கும் போது, உக்ரைன் – ரஷ்யா போரானது ஐரோப்பாவில் பொருளாதாரத்தை பெரிதளவு தாக்கி வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் ஆண்டுக்கான மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் மிகவும் குறைந்த அளவில் 0.5% மட்டுமே இருக்கிறது.

வொர்க் ஃப்ரம் ஹோம்

இங்கிலாந்தைப் பொருத்தவரை, 2022-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து 2023-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வரை கிட்டத்தட்ட பூஜ்ஜிய ஜி.டி.பி வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. இது எதிர்காலத்தில் 0.3 சதவிகிதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் வங்கி வட்டி விகிதங்களைத் தீவிரமாக உயர்த்தியுள்ளன. இது மட்டுமில்லாமல், அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதன் செப்டம்பர் கூட்டத்தில் வட்டி விகிதங்களைக் குறைக்கவோ, கூட்டவோ செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளது

ரஷ்யா-உக்ரைன் போரும், விநியோகச் சங்கிலிகளில் அதன் தாக்கமும், உயர் பணவீக்க விகிதங்கள் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகித உயர்வு ஆகியவை அமெரிக்காவில் மந்தநிலை குறித்த அச்சத்தை ஏற்படுத்துயிருக்கிற நிலையில், பிற துறைகளும் இதன் மூலம் பாதிப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா – உக்ரைன் போர்

இதனை அடுத்து உலகின் பெரிய சாஃப்ட்வேர் நிறுவனங்கள் எல்லாம் தங்கள் சந்தைப்படுத்துதலையும் பிற செலவீனங்களையும் பெரிய அளவில் குறைத்துள்ளது. ஆட்குறைப்புப் பணிகளும் நிகழ்ந்து வருகின்றன. ஆனால், ஜோஹோ நிறுவனம் ஆள்குறைப்பு செய்யாமல் புதிய பணியாளர்களை எடுப்பதைக் குறைத்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையை ஆராய்ந்து பார்க்கும்போது, ஐ.டி துறையில் புதிதாக வேலைக்கு சேரும் ஐ.டி ஊழியர்களுக்கு எச்சரிக்கை மணியாகவே இது தெரிகிறது. குறைந்தபட்சம் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஐ.டி துறையில் புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த சூழ்நிலைகளை எப்படி கடந்து வரவிருக்கின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.