போதைக்கு எதிராக போராடும் சாலா
பீப்பிள் மீடியா பேக்டரி சார்பில் டி.ஜி.விஸ்வ பிரசாத், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ள படம் 'சாலா'. தீவிரமான மதுப்பழக்கம் காரணமாக சமூகத்தில் நடந்து வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து இப்படம் பேசுகிறது. ஒயின் ஷாப் ஒன்றை குத்தகைக்கு எடுக்கும் விஷயத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்படும் மோதல் மற்றும் அதற்குப் பிறகான பகை குறித்து இப்படம் சொல்கிறது. எஸ்.டி.மணிபால் எழுதி இயக்கி இருக்கிறார். சாலமன் என்கிற சாலா கேரக்டரில் தீரன் நடித்துள்ளார். மற்றும் ரேஷ்மா, சார்லஸ் வினோத், நாத், அருள்தாஸ், சம்பத் ராம் நடித்துள்ளனர். ரவீந்திர நாத் குரு ஒளிப்பதிவு செய்துள்ளார். தீசன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் மணிபால் கூறும்போது, “கதையே கதையின் நாயகன் என்ற கோட்பாடு தமிழ் சினிமா வரலாற்றில் மீண்டும் மீண்டும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. 'சாலா' ஒரு தனித்துவமான மற்றும் அழுத்தமான கதையைக் கொண்டுள்ளது. இது சமகாலத்தில் மதுப்பழக்கம் காரணமாக சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசுகிறது. படம் அதைச் சுற்றியுள்ள பிரச்சினைகளைக் காண்பிப்பதன் மூலம் பார்வையாளர்கள் மத்தியிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. ஒரு ஒயின் ஷாப்பை குத்தகைக்கு எடுக்கும் செயல்பாட்டில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் மற்றும் அதன் பின்னான பகை ஆகியவற்றைச் சுற்றி கதை பரபரப்புடன் நகர்கிறது.
அறிமுக நடிகையான ரேஷ்மா, கதாநாயகியாக புனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 25 வயது சமூக ஆர்வலராகவும், மதுப்பழக்கத்தை கடுமையாக எதிர்க்கும் பள்ளி ஆசிரியையாகவும் இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.