“திராவிட மாடல் அரசு எப்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப்போகிறது?” – சீமான் கேள்வி

சென்னை: ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்று திராவிடத்துக்கு புதிதாக ஒரு பொழிப்புரையை வழங்கி வரும் திராவிட ஆட்சியாளர்கள் எப்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போகிறார்கள்? எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கச் செய்வதல்ல சமூக நீதி; எல்லார்க்கும் எல்லாம் சரியான அளவில், சமமான அளவில் கிடைக்கச் செய்வதே உண்மையான சமூக நீதி என்பதை எப்போது உணரப்போகிறது ‘திராவிட மாடல்’ திமுக அரசு?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நீதி மண்ணில் குடிவாரி கணக்கெடுப்பு எப்போது? நாட்டிலேயே முதன் முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பினை வெற்றிகரமாக நடத்தி முடித்து அதனை அனைத்து மக்களும் அறியும் வகையில் பொதுவெளியில் வெளியிட்டுள்ள பிஹார் மாநில முதல்வர் உண்மையான சமூக நீதிக் காவலர் நிதீஷ் குமாருக்கு அன்பு நிறைந்த பாராட்டும், வாழ்த்துகளும்.

அனைத்து மக்களுக்கும் சரியான சமமான நீதியை வழங்குவதே உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும். அதற்கு அடித்தளமாக விளங்கும் சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பதன் மூலம் இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றார். சமூக நீதிக்கான நெடும் பயணத்தில் நிதிஷ்குமார் நிலைநாட்டியுள்ள புதிய மைல்கல் என்றென்றும் அவரது புகழை அழியாதுப் போற்றும் வரலாற்று பெருஞ்சாதனையாகும்.

சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் பிஹாரில் 63 % உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் வெறும் 27% இட ஒதுக்கீட்டையும், மாறாக வெறும் 15 % மட்டுமே உள்ள முன்னேறிய வகுப்பினர் 10% இட ஒதுக்கீட்டையும் பெற்று வரும் சமூக அநீதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்று திராவிடத்துக்கு புதிதாக ஒரு பொழிப்புரையை வழங்கி வரும் திராவிட ஆட்சியாளர்கள் எப்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப்போகிறார்கள்? எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கச்செய்வதல்ல சமூகநீதி; எல்லார்க்கும் எல்லாம் சரியான அளவில், சமமான அளவில் கிடைக்கச்செய்வதே உண்மையான சமூகநீதி என்பதை எப்போது உணரப்போகிறது ‘திராவிட மாடல்’ திமுக அரசு?

சமுக நீதி மண் என்று சொல்லிக்கொள்ளாத பிஹார் மாநிலம் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி முடித்து உண்மையான சமூகநீதிக்கான முதல் அடியை எடுத்துவைத்து முன்னேறி சென்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் சமூக நீதி மண், பகுத்தறிவு பூமி, பெரியார் மண், அண்ணா மண் என்றெல்லாம் தற்புகழ்பாடும் திராவிடத் திருவாளர்கள் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த எப்போது முன்வரப் போகிறார்கள்?” என்று சீமான் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.