பெண்கள் மயமாகிறது குடியரசு தின அணிவகுப்பு| Republic Day parade for women

பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிடும் மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளதை கொண்டாடும் விதமாக, அடுத்த ஆண்டு புதுடில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் அனைத்திலும், முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.

பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டுமென்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

தேவ கவுடா, மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமர்களாக இருந்த காலகட்டத்தில் இதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டும், இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

ஆனால், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த மசோதாவை புதிய பார்லி., கட்டடத்தின் முதல் அலுவலாக எடுத்துக் கொண்டு, அதிரடியாக நிறைவேற்றி காட்டிவிட்டது.

இந்நிலையில்தான், மத்திய அரசு தன் அடுத்த அதிரடியை சத்தமில்லாமல் துவங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 26 அன்று குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் டில்லியில் கோலாகலமாக நடப்பது வழக்கம்.

வரும் ஆண்டில் இதை வித்தியாசமாக இதை கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கலாசார அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:

வரும் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது, எங்கு பார்த்தாலும் பெண்கள் மயமாகவே காட்சி அளிக்கப் போகிறது.

பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றிய பெருமையும், பெருமிதமும் கொண்டுள்ள, தற்போதைய மத்திய அரசு, இந்த குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளை முழுதுமாக பெண்களுக்கே அர்ப்பணிக்க உள்ளது.

முப்படை அணிவகுப்பு ஊர்வலங்கள், விண்ணில் மேற்கொள்ளும் சாகசங்கள், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் என அனைத்திலுமே பெண்கள்தான் பங்கேற்கப் போகின்றனர்.

மாநிலங்கள் வாரியாக ஊர்வலமாக வரப் போகும் அலங்கார வண்டிகளிலும், பெண்கள்தான் பங்கேற்க போகின்றனர்.

அலங்கார வண்டிகளின் கருப்பொருளும், பெண்களை மையமாகவே வைத்து அமையவுள்ளன.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

– நமது டில்லி நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.