புதுடெல்லி: சத்தீஸ்கரில் ரூ.27 ஆயிரம் கோடி, தெலங்கானாவில் ரூ.8 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று சத்தீஸ்கர் சென்ற பிரதமர் மோடி ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தார்.
இதில் நகர்னார் பகுதியில் ரூ.23,800 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள என்எம்டிசி எஃகுஉருக்காலை உள்ளிட்ட திட்டங்களும் அடக்கம். நகர்னார் பகுதி திட்டத்தைத் தொடங்கிவைத்த பின்னர் பாஸ்டர் பகுதியிலுள்ள தாண்டேஸ்வரி கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
முன்னதாக நடைபெற்ற வளர்ச்சித் திட்ட விழாவில் அவர்பேசும்போது, “நகர்னார் பகுதியில்அமைந்துள்ள இந்த எஃகு உருக்காலை மிகச் சிறப்பான முறையில்தயாராகி உள்ளது. இங்கு உயர்தரமான எஃகு உருவாக்கப்படும். இதன்மூலம் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவர். தொழிற்சாலையில் இப்பகுதி சிறப்பான முறையில் வளர்ச்சி அடையும்” என்றார்.
மேலும் அன்டாகர்-தரோக்கி இடையே ரயில் பாதை, ஜக்டால்பூர்-தாந்தேவாடா இடையே இரட்டை ரயில் பாதை திட்டம், போரிதந்த்-சுரஜ்பூர் இடையே இரட்டை ரயில்பாதைத் திட்டம், தரோக்கி-ராய்ப்பூர் இடையே மின்சார ரயில் சேவை உள்ளிட்ட திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
பின்னர் நேற்று மாலை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்ற அவர், ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
பின்னர் அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஹைதராபாத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் 48 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இது முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. அதன் பின்னர் அவர் டெல்லி வந்தார்.
அப்போது அவர், தெலங்கானா ஆட்சியை எனது மகன் கேடிஆருக்கு வழங்கிவிடலாம் என நினைக்கிறேன். நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும் என்றார். ‘இது என்ன மன்னர் ஆட்சியா, முடிசூட்டுவதற்கு’ என நான் கேள்வி எழுப்பினேன்.
பின்னர் பாஜக கூட்டணியில் சேருகிறேன் என அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை சந்திரசேகர ராவ் தொடங்கினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. ஹைதராபாத் மேயர் தேர்தலில் ஆதரவு தெரிவிக்குமாறு கோரினார். எதிர் அணியில் இருப்பேனே தவிர கூட்டணி வைக்கமாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டேன். பாஜக கூட்டணியில் சேர அவரை அனுமதிக்கவில்லை. அதன் பின்னர்அவர் என்னை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.