ராஞ்சி: ஜார்க்கண்டில் மிகவும் பின்தங்கிய கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 25 பேர் இஸ்ரோவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள விஞ்ஞானிகளிடம் வான் அறிவியல் தொடர்பான பல்வேறு தகவல்களை கேட்டறிந்தனர்.
இஸ்ரோவுக்கு பயணம் மேற்கொண்ட மாணவிகளுள் ஒருவரான மனிஷா குமாரி (15) கூறியுள்ளதாவது: ஜார்க்கண்டில் மிகவும் ஏழ்மையான மாவட்டமான கும்லாவில் வசிக்கும் நான் இதற்கு முன் வெளியே சென்று ரயிலைக் கூட பார்த்ததில்லை. இந்த நிலையில், நான் உட்பட 25 பள்ளி மாணவிகள் இணைந்து சென்னைக்கு விமானம்மூலம் 1,700 கி.மீ. பயணித்து பின்னர் சாலை வழியாக ஸ்ரீஹரி கோட்டாவை சென்றடைந்தோம். அங்கு இந்திய விண்வெளி ஆய்வுநிறுவன (இஸ்ரோ) வளாகத்தை அனைவரும் சேர்ந்து பார்வையிட்டோம். அறிவியல் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கான விடைகளை இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். இப்போது, என்னுள் தன்னம்பிக்கை உணர்வு அதிகரித்துள்ளது. இவ்வாறு மனிஷா தெரிவித்தார்.
மாவட்டக் கல்விக் கண்காணிப்பாளர் (டிஎஸ்இ) முஹம்மது வாசிம் கூறுகையில், “இங்குள்ள மக்கள் தொகையில் 65 சதவீதத்துக்கும் அதிகமானோர் பழங்குடியினர். அவர்கள் ஒற்றைப் பயிர் விவசாயத்தை மட்டுமே நம்பியிருப்பதால் பலர் வேலைக்காக நாட்டின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்று விடுகின்றனர். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகள் இஸ்ரோ போன்ற பெரிய நிறுவனங்களுக்கு செல்வது கனவாக மட்டுமே இருந்தது. அதனை தற்போது நனவாக்கியுள்ளோம். ஒரு நாள் இந்த மாணவிகளை நாசாவுக்கும் அழைத்துச் செல்வோம்” என்றார்.