World Cup 2023 Captain’s Day Live Telecast: அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 2023 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் கேப்டன்கள் தினம் நிகழ்வு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (அக். 4) நடைபெற உள்ளது.
தொடக்க விழா ரத்து
உலகக் கோப்பை (World Cup 2023) தொடரில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் இதில் பங்கெடுக்கின்றனர். இந்தியாவின் ரோஹித் சர்மா மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் புதன்கிழமை மதியம் 2.30 மணிக்கு ஊடகவியலாளர்களுடனான கேப்டனின் உரையாடல் அமர்வுக்காக அகமதாபாத்திற்கு வந்துள்ளனர். முன்னதாக, தொடக்க விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டன.
அனைத்து ஒருநாள் உலகக் கோப்பைக்கும் முன்பு ஒவ்வொரு முறையும் இந்த நிகழ்வு நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களிலும் இரண்டாமிடம் பிடித்த நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெறுகிறது.
கேப்டன்களின் சங்கமம்
இந்த தொடக்க ஆட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக கேப்டன்கள் தினம் நிகழ்வு (World Cup 2023 Captain’s Day) நடக்கும். ரோஹித், பாபர் மட்டுமின்றி, இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இலங்கை கேப்டன் தசுன் ஷனகா, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி, தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா, வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹாசன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இது குறித்து ஐசிசி நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில்,”குஜராத் கிரிக்கெட் வாரியத்தின் கிளப்ஹவுஸின் பேங்க்வெட் ஹாலில் கேப்டன்கள் தின ஊடக நிகழ்வு மதியம் 2.30 மணிக்குத் தொடங்கும். நிகழ்வின் நேரடி ஒளிபரப்பைத் தொடங்க ஊடகங்கள் பிற்பகல் 2:15 மணிக்குள் இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவின் இரண்டாவது பயிற்சி ஆட்டமும் நேற்று ரத்தான நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து அகமதாபாத்துக்கு ரோகித் சர்மா விமானம் மூலம் வந்தார். ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றபின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஹைதராபாத்தில் இருந்து விமானத்தில் அகமதாபாத் வந்தனர். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அகமதாபாத்தை அடைந்துவிட்டன.
நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்?
உலகக் கோப்பை தொடரின் கேப்டன்கள் தினம் நிகழ்ச்சி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையதளம் மற்றும் மொபைல் சாதனங்களில் உள்ள செயலியில் இலவசமாக லைவ் ஸ்ட்ரீமிங்கிற்குக் கிடைக்கும். சந்தா அடிப்படையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் லேப்டாப், டிவி மற்றும் ஸ்ட்ரீமிங் சாதனங்களிலும் லைவ் ஸ்ட்ரீமிங் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்நிகழ்ச்சியின் நேரலை மதியம் 2.30 மணிக்கு தொடங்கும்.