காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து மக்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒவ்வொருத் துறை ஊழியர்களைச் சந்தித்து உரையாற்றி வருகிறார். கடந்த ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை மூலம் இந்தியா முழுவதும் பயணம் செய்தார். சமீபத்தில் பஞ்சாப்பிலுள்ள பொற்கோயிலில் பக்தர்கள் பயன்படுத்திய பாத்திரங்களைக் கழுவுதல், சமையலுக்கு உதவி செய்தல் போன்ற சேவைகளை செய்ததும், சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இந்த நிலையில், இன்று தனது தாயாருக்குப் பரிசு வழங்கும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் ராகுல். கடந்த ஆகஸ்ட் மாதம் கோவாவுக்குச் சென்ற ராகுல் காந்தி, `ஜாக் ரஸ்ஸல் டெரியர்’ வகை நாய்க்குட்டியைத் தத்தெடுத்திருந்தார். இன்று சர்வதேச விலங்குகள் தினத்தை முன்னிட்டு, கோவாவிலிருந்து வரவழைக்கப்பட்ட நூரி எனப் பெயர் வைக்கப்பட்ட அந்த நாய்க்குட்டியை, தனது தாயாருக்குப் பரிசளித்திருக்கிறார். அவர் பகிர்ந்த வீடியோவில், சோனியா காந்தியிடம் ‘அம்மா உங்களுக்கு ஒரு பரிசு’ எனக் கூறி அழைத்து வருகிறார் ராகுல்.
சிறிய பெட்டியைக் காண்பித்து திறக்கக் கூறியபோது, அதிலிருந்து நூரி நாய்க்குட்டி வெளியேவந்தது. அதைப் பார்த்து மகிழ்ந்த சோனியா காந்தி ‘நூரி அழகாக இருக்கிறது’ எனக் கூறினார். அந்த வீடியோவைப் பகிர்ந்து, “எங்கள் குடும்பத்தின் புதிய மற்றும் அழகான உறுப்பினரை நீங்கள் அனைவரும் சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இவள்தான் எங்கள் குட்டி நாய் நூரி. கோவாவிலிருந்து நேராக எங்கள் கைகளில் பறந்து வந்து, எங்கள் வாழ்க்கையின் ஒளியாக மாறியிருக்கிறாள். நிபந்தனையற்ற அன்பும், சமரசமற்ற விசுவாசமும் இந்த அழகான விலங்கு நமக்கு கற்பிக்கக்கூடியது. அனைத்து உயிரினங்களுடனும் நமது அன்பைப் பகிர்ந்து கொண்டு, அதைப் பாதுகாப்பதற்கு நாம் உறுதியளிக்க வேண்டும். இன்று உலக விலங்குகள் தினம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.