வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கு உள்ள சட்ட பாதுகாப்பு தொடர்பாக, 1998ல் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து மறுஆய்வு செய்யும் ஏழு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வின் விசாரணை துவங்கியது.
கடந்த, 1993ல் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமைந்திருந்தது. அப்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. எதிர்க்கட்சி தரப்பில் இருந்த, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் சிபு சோரன் மற்றும் அந்தக் கட்சியின் நான்கு எம்.பி.,க்கள் லஞ்சம் வாங்கி, நரசிம்மராவுக்கு ஆதரவாக ஓட்டளித்ததாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு, 1998ல் தீர்ப்பு அளித்தது.
‘சட்டசபை அல்லது பார்லிமென்டில் பேசுவது அல்லது ஓட்டளிப்பது தொடர்பான விவகாரத்தில், மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது.அதனால், லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது’ என, குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், சிபு சோரனின் மருமகளும், ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.,வுமான சீதா சோரன், 2012 ராஜ்யசபா தேர்தலின்போது லஞ்சம் வாங்கி மாற்றி ஓட்டளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரும் அவருடைய மனுவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதை 2019ல் விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்தது. இதை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அமர்வு, ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்தது.
இதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான, ஏழு நீதிபதிகள் அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின், அரசியலமைப்பு சட்ட அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.’மக்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பானது, அவர்களுடைய நடவடிக்கையினால், குற்ற நிகழ்வு நடந்தால் அதற்கும் பொருந்துமா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்’ என, அமர்வு குறிப்பிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement