சென்னை: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்கவும், அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். அதனை ஆசிரியர்கள் ஏற்க மறுத்ததோடு, போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 7 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர டிபிஐ வளாகத்தில் மற்றொரு பகுதியில் பணி நிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்களும், டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குதல் உட்பட கோரிக்கைகளை முன்வைத்து 2013-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டு நலச் சங்கத்தினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில் காவல் துறையினர் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பை சேர்ந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்துள்ளனர். சுமார் 7 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மேற்கொண்டு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்து காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.