ஆமதாபாத்: உலக கோப்பை தொடர் இன்று(அக்.,5) ஆமதாபாத்தில் ஆரம்பமாகிறது. அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ‘சூப்பர்’ விருந்து காத்திருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 1975 முதல் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 13வது சீசன் இன்று இந்தியாவில் துவங்குகிறது. பைனல் நவ.19ல் நடக்க உள்ளது. வீரர்களின் சரவெடி ஆட்டம் காரணமாக தீபாவளி பண்டிகை(நவ.12) முன்னதாகவே வந்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட 10 அணிகள், ‘ரவுண்டு ராபின்’ முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். மொத்தம் 45 லீக் போட்டிகள் முடிவில் ‘டாப்-4’ இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்திய அணி தனது முதல் போட்டியில் அக். 8ல் சென்னையில் ஆஸ்திரேலியாவை சந்திக்கவுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, கோஹ்லி, சுப்மன் கில், ராகுல் என முன்னணி வீரர்கள் பேட்டிங்கை கவனித்துக் கொள்ள, பவுலிங்கில் கைகொடுக்க பும்ரா, சிராஜ் உள்ளனர். கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் இடம் பிடித்த அஷ்வின், இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுக்கலாம்.
ஐந்து முறை சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, 1987ல் இந்திய மண்ணில் சாதித்தது போல, இம்முறை வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தலைமையில் மீண்டும் அசத்த முயற்சிக்கலாம். நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் கோப்பை போட்டியில் உள்ளது.
ஐ.சி.சி., தொடர்களில் பொதுவாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி நியூசிலாந்து. 2015, 2019 என அடுத்தடுத்து தொடர்களில் பைனலுக்கு முன்னேறியது. இம்முறை மீண்டும் மிரட்டலாம்.
தவிர, ஷனகாவின் இலங்கை, பவுமாவின் தென் ஆப்ரிக்கா, சாகிப் அல் ஹசனின் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளும் சவால் கொடுக்கலாம்.
‘பத்து’ எப்படி
உலக கோப்பை தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இந்தியா, நேரடியாக பங்கேற்கிறது.
* ஐ.சி.சி., உலக கோப்பை சூப்பர் லீக் தொடரில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த 13 அணிகள் இடையிலான, 83 போட்டிகள் (இருதரப்பு மோதல்) முடிவில் ‘டாப்-7’ அணிகள் உலக தொடருக்கு முன்னேறின.
* இதன் படி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் என 7 அணிகள் தகுதி பெற்றன.
* மீதமிருந்த 5 அணிகள் உலக கோப்பை தகுதிச்சுற்றில் மோதின. முடிவில் இலங்கை, நெதர்லாந்து முன்னேற, மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன.
முதன் முறை
உலக கோப்பை தொடரை முதன் முறையாக இந்தியா மட்டும் தனியாக நடத்துகிறது. முன்னதாக 1987ல் இந்தியா, பாகிஸ்தான், 1996ல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, 2011ல் இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து நடத்தின.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்