கேங்டாக் : சிக்கிம் மாநிலத்தில், திடீர் மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டியதில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பலியானோர் எண்ணிக்கை, 14 ஆக உயர்ந்தது. இந்நிலையில் மாயமான, 22 ராணுவ வீரர்கள் உட்பட, 102 பேரை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது. இங்கு வடக்கே உள்ள லாச்சென் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் காலையில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது.
இதனால் லோனாக் ஏரி நிரம்பி, தீஸ்தா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
இந்த திடீர் வெள்ளத்தால், 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், 22 ராணுவ வீரர்கள் உட்பட, 102 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மாநில பேரிடர் நிர்வாக ஆணையம் உள்ளிட்ட மீட்புப் படைகள் ஈடுபட்டுள்ளன.
மழை, வெள்ளத்தில் சிக்கிய, 2,011 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட, 22,000க்கும் மேற்பட்டோர், 26 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மிகவும் பாதிக்கப்பட்ட சிங்டாம் பகுதியில், முதல்வர் பிரேம் சிங் தமாங்க் நேற்று காலை நேரில் சென்று, பாதிப்புகளை ஆய்வு செய்தார். தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார். அங்கு அவசர கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.
”தேவையான அனைத்து நிவாரண நடவடிக்கைகளிலும் மாநில அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது.
”மத்திய அரசும் தொடர்ந்து தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்து வருகிறது,” என, முதல்வர் தமாங்க் தெரிவித்தார்.இந்த திடீர் வெள்ளப் பெருக்கால், மாங்கான் மாவட்டத்தில் எட்டு பாலங்கள் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதி களில், 11 பாலங்கள் சேதமடைந்துள்ளன.
சுங்க்தாங் நகரில், 80 சதவீத பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மே.வங்கத்திலும் வெள்ளம்
வடகிழக்கு மாநிலமான சிக்கிமை ஒட்டிஉள்ள மேற்கு வங்கத்தின் பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 10,000க்கும் அதிகமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.காலில் ஏற்பட்ட காயத்துக்காக ஓய்வு எடுத்து வரும், முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, வீட்டில் இருந்தபடியே, நிலவரம் குறித்து கண்காணித்து வருகிறார்.மீட்பு நடவடிக்கைகளுக்கான உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் வட மாவட்டங்களுக்கு நேற்று நேரில் சென்ற, கவர்னர் சி.வி.ஆனந்த போஸ், பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்