வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹாங்சு: ஆசிய விளையாட்டில் ஆடவர் கிரிக்கெட் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேசத்ததை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. இதன்மூலம் தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை இந்திய அணி உறுதி செய்தது.
சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விளையாட்டாக ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு நாளும் இந்தியா வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று (அக்.,5) நடைபெற்ற ஆடவர் கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர் சாய் கிஷோர் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக ரன்கள் குவித்தது. வெறும் 9.2 ஓவரிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/gallerye_110439406_3450440.jpg)
இந்திய வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 26 பந்தில் 40 ரன்களும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 26 பந்தில் 55 ரன்களும் (2 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததால் இந்திய அணி தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் வெல்வது உறுதியானது. நாளை இறுதிப்போட்டி நடக்க இருக்கிறது.
ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement