`பாஜக தனித்துதான் போட்டி?!' – உறுதி செய்தாரா அண்ணாமலை?

கடந்த 3-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (05.10.2023) நடைபெற்றது. உடல்நிலை காரணமாக ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தை அண்ணாமலை ஒத்திவைத்துள்ள போதிலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவு, அண்ணாமலையின் டெல்லி பயணம் ஆகியவற்றுக்குப் பிறகு, இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவதால் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

ஒரு மணி நேரத்திற்கு மேல், தாமதமாகவே அண்ணாமலை கூட்டத்திற்கு வந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் மீண்டும் பா.ஜ.க கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துமா? அல்லது தனித்துதான் போட்டியிடுமா? டெல்லிக்குப் போய் அண்ணாமலை என்ன பேசினார்? நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்றெல்லாம் தெரியாமல் பாஜக நிர்வாகிகளே குழப்பத்தில்தான் உள்ளனர். இந்த கேள்விகளுக்கு எல்லாம் அண்ணாமலை விடைகொடுப்பார் என்ற நம்பிக்கையோடுதான் நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

பாஜக ஆலோசனை

ஆனால் அண்ணாமலை பேசுவதற்கு முன்பே இந்த சஸ்பென்ஸை உடைக்கும் விதமாக, பாஜக-வின் மாநில அமைப்பு பொதுச் செயலாளரான கேசவ விநாயகம்தான் பொடி வைத்துப் பேசினார். “பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியிடுவது ஒன்றும் புதிதல்ல. பல முறை தனித்து தேர்தலை சந்தித்துள்ளோம். அதனால் நாம் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகளை தேசிய தலைமை கண்காணித்துக்கொண்டு இருக்கிறது. தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்றார். ஆக, எடுத்த எடுப்பிலேயே தனித்துப் போட்டியிடுவது ஒன்றும் புதிதல்ல என கேசவ விநாயகம் கூறியவுடனேயே, நிர்வாகிகள் மத்தியில் கொஞ்சம் தெளிவு கிடைத்துவிட்டது. கூடவே பயமும் தொற்றிக்கொண்டது என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.

“கூட்டணி என்றால் ஒற்றை இலக்கத்தில்தான் போட்டியிடுவோம், தனித்துப் போட்டி என்றால் எல்லா தொகுதிகளிலும் பணியாற்ற வேண்டியிருக்குமே, பிற பெரிய கட்சிகள் எதுவும் இல்லை, எப்படிப் பணியாற்றப் போகிறோம்” என்று கூட்டத்திற்குள்ளேயே முனுமுனுப்புகள் எழத் தொடங்கிவிட்டன. இந்த முனுமுனுப்புக்கு மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை, “வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காலூன்றும் வகையில் `பூத்’களை வலிமைப்படுத்த வேண்டும். வாரந்தோறும் கிளைக்கழக கூட்டங்களை நடத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 1 முதல் 10-ஆம் தேதிவரை அனைத்து அணி பிரிவு பொறுப்பாளர்களுக்கும் கூட்டம் நடத்தி, புகைப்படங்களை தலைமைக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டி முழுமையாக அமைக்கப்பட்டு, அதனை சாரல் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். பொறுப்பாளர்கள் இதனை கண்காணித்து தலைமைக்கு அப்டேட் செய்ய வேண்டும். நிர்வாகிகள் யாருக்குமே அடுத்த 7 மாதங்கள் ஓய்வு கிடையாது” என்று அறிவுரைகளை அள்ளிக் கொட்டினார்.

அண்ணாமலை

2, 3 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகளை ஏழே மாதங்களுக்குள் செய்து முடிக்கச் சொல்கிறாரே, இதெல்லாம் சாத்தியம்தானா என்று உள்ளுக்குள் சிலர் வினாவிக் கொண்டிருக்க, அடுத்த மேலும் சில கட்டளையும் கொடுத்தார் அண்ணாமலை. “மகளிர் உரிமைத்தொகை 1 கோடி பேருக்கு கொடுத்திருக்கிறார்கள். ஒன்றரை கோடி பேருக்கு கொடுங்கள் எனக்கேட்டு நாம் போராட்டங்களை நடத்த வேண்டும். அடுத்த 7 மாதங்களுக்கு பாஜக போராட்டங்கள் இல்லாமல் இருக்கவே கூடாது. திமுக அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். பூத் கமிட்டிகளில் பெண்களை அதிகம் சேர்க்க வேண்டும். பெண்கள் சென்று ஓட்டு கேட்டால் யாரும் மாற்றி ஓட்டுப் போட மாட்டார்கள். அரசு நடத்தும் கிராம சபைக் கூட்டங்களைப் போல, பாஜக சார்பில் வரும் 15-ஆம் தேதி ஒவ்வொரு கிளைகள்தோறும் “கூடுவோம் கூட்டுவோம்” எனும் கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் பேசப்படும் மக்கள் பிரச்னைகளை கையிலெடுக்க வேண்டும்” என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டாராம்.

இப்படியே அண்ணாமலை பலவற்றை பேசிக்கொண்ட இருந்தாலும், கூட்டணி குறித்து எப்போது விளக்குவார், டெல்லியில் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலே நிர்வாகிகளிடம் இருந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே கடைசியில், கூட்டணி விவகாரத்திற்கு வந்தார்.

“கூட்டணி முடிவை தேசிய தலைமைதான் முடிவெடுக்கும். என் கருத்தை நான் ஆழமாக கூறிவிட்டேன். இனி முடிவு டெல்லியில்தான் எடுக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் நாம் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

மோடி, அமித் ஷா, அண்ணாமலை

இறுதியாக, “சென்னையில் நடைபெறும் ‘என் மண் என் மக்கள்’ நடைபயண நிறைவு கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாகவும், அந்த கூட்டத்திற்கு 10 லட்சம் தொண்டர்களை திரட்ட வேண்டுமென்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டாராம். இதன் மூலம், அண்ணாமலை தனது முடிவை டெல்லியில் சொல்லி வந்திருப்பது தெரிய வருகிறது. அதே போல, கூட்டணி விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பதும் தெரிகிறது. மேலும் , `நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 5 மாநில தேர்தல்கள் இருப்பதால், டெல்லி தலைமை அதற்கு தான் முதலில் முக்கியத்துவம் அளிக்கும்’ என்றும் சொல்லப்படுகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.