பெங்களூரு: பிஹாரைத் தொடர்ந்து கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். இனியும் காலதாமதம் செய்யக்கூடாது என அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அண்மையில் பிஹாரில் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதன் விபரங்களை கடந்த 7 ஆண்டுகளாக வெளியிடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான வீரப்ப மொய்லி கூறியதாவது: கடந்த 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை சித்தராமையா முதல்வராக இருந்த போது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் ரூ.162 கோடி செலவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மக்களின் பொருளாதார, சமூக விவரங்களும் திரட்டப்பட்டன. அந்த அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
பின்னர் ஆட்சிக்கு வந்த மஜத காங்கிரஸ் கூட்டணி அரசு, பாஜக அரசு ஆகியவை அதனை வெளியிடவில்லை. தற்போது சித்தராமையா மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதால் அந்த அறிக்கையை வெளியிட வேண்டும். மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் பின்தங்கிய வகுப்பினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போது தான் கர்நாடகாவில் சமூக நீதி நிலைநாட்டப்படும்” எனத் தெரிவித்தார். இதே கோரிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஹரி பிரசாத், ஆஞ்சனேயா, மகாதேவப்பா ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், ”சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்தை வெளியிட அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து உரிய முடிவெடுக்கப்படும். அந்த அறிக்கையின் விவரங்களின் அடிப்படையில் பட்டியல், பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்” என்றார்.