மும்பை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த மாதம் 15-ம் தேதி வெளியானது. இந்த படம் கடந்த மாதம் 28-ம் தேதி இந்தியில் வெளியிடப்பட்டது. இதற்காக தணிக்கை குழுவுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக நடிகர் விஷால் சமூக வலைதளம் வாயிலாக புகார் கூறினார்.
இதுதொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை உத்தரவிட்டது. இதன்படி சிபிஐ விசாரணை நடத்தி 3 இடைத்தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடாத தணிக்கை குழு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திரைப்பட தணிக்கை குழு மற்றும் தனி நபர்களுக்கு எதிராக அண்மையில் புகார் எழுப்பப்பட்டது. இந்த புகார் தொடர்பாக மும்பை உட்பட 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன்பேரில் இடைத்தரகர்கள் மெரின் மேனகா, தீஜா ராம்தாஸ், ராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெயர் குறிப்பிடாத தணிக்கை குழு அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.