ஓஸ்லோ: ஈரானைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் நர்கீஸ் முகம்மதி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சுவீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆல்பிரட் நோபல் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர். குறிப்பாக டைனமைட் என்ற வெடிபொருளை கண்டுபிடித்து உலக புகழ் பெற்றார். ஆனால், டைனமைட் வெடிபொருளால் பெரும் பாதிப்பு ஏற்படுவதை கண்டு வேதனை அடைந்தார். இவரது சகோதரர் இறந்த போது, ஆல்பிரட் நோபல்தான் இறந்து விட்டார் என்று நினைத்து, ‘மரண வியாபாரி மரணம்’ என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அதன்பின், தனது சொத்துகள் அனைத்தையும் சமூக மேம்பாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு விருதாக வழங்கும்படி உயில் எழுதி வைத்தார்.
அதன்படி ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனைபடைப்பவர்களுக்கு நோபல் பரிசுவழங்கப்படுகிறது. ஐந்து பரிசுகள்மட்டும் சுவீடனில் வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயின் ஓஸ்லோ நகரில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த2-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுவருகின்றன. ஏற்கெனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. ஈரான் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான பெண்சமூக ஆர்வலர் நர்கீஸ் முகம்மதிஅமைதிக்கான நோபல் பரிசுக்குதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
31 ஆண்டுகள் சிறை தண்டனை: ஈரானில் சமூக மாற்றங்களுக்காக தொடர்ந்து போராடி வருபவர் நர்கீஸ். இதுவரை 13 முறை அவரை கைது செய்துள்ளனர். ஐந்து முறை சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன் 31 ஆண்டுகள் சிறை மற்றும்154 கசையடியும் இவருக்கு தண்டனையாக வழங்கப்பட்டன. பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குவதை எதிர்த்து போராடியவர். அவர் தற்போதும் டெஹ்ரானில் உள்ள சிறையில் இருக்கிறார். அனைவருக்கும் சுதந்திரம், பெண்கள் முன்னேற்றம், மனித உரிமைகள் போன்றவற்றுக்காக துணிச்சலாக குரல் கொடுத்து வருகிறார். பெண்ணுரிமை, மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் போன்றவற்றுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்தார். அதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்று தேர்வு குழு தெரிவித்துள்ளது.
ஈரானில் பெண்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். பொதுவெளியில் சரியாக ஆடை அணியவில்லை என்று மெஹ்சா அமினி என்ற குர்திஷ் இனஇளம்பெண்ணை, ஈரான் போலீஸார் கைது செய்து சித்ரவதை செய்தனர். போலீஸ் காவலில் அவர்உயிரிழந்தார். இதை கண்டித்து ஈரானில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் ஈரானைச் சேர்ந்த சமூக ஆர்வலர்நர்கீஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.