நம்மில் பலருக்கும் வீட்டை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கனவாக இருக்கும். அதற்கான கலைப்பொருள்களைத் தேடித்தேடி வாங்குவோம். தஞ்சை என்றால் தலையாட்டி பொம்மை, செங்கோட்டை என்றால் மூங்கில் ஊஞ்சல்கள், மானாமதுரை என்றால் கடம் என ஒவ்வோர் ஊருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். ஆன்லைனில் இன்று அனைத்து விதமான கலைப்பொருள்களும் கிடைக்கின்றன என்றாலும், அந்தப் பொருள்களை பாரம்பர்யமாக உற்பத்தி செய்யும் இடத்தில் வாங்கும்போது இன்னும் தனித்துவமாக இருக்கும். `அதற்காக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யவா முடியும்?’ என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது…
உங்களின் கலைத்தேடலை எளிமையாக்கும் விதமாகவும் தமிழ்நாடு மகளிர் சுயஉதவிக் குழுவினரை ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களின் விற்பனைக் கண்காட்சியை `தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்’ மற்றும் `அவள் விகடன்’ இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளன.
இந்த விற்பனைக் கண்காட்சியில் பாரம்பர்ய உணவு தொடங்கி, பட்டுப்புடவைகள், பருத்தி ஆடைகள், மண்பாண்டப் பொருள்கள், தரமான வீட்டு உபயோகப் பொருள்கள், மரச்சிற்பங்கள், மண் பொம்மைகள், வாசனை திரவியங்கள், பனைஓலை பொருள்கள், சணலால் ஆன கலைப்பொருள்கள் எனப் பல விதமான பொருள்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/WhatsApp_Image_2023_10_06_at_5_19_09_PM.jpeg)
இந்த நிகழ்வு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அக்டோபர் 07 முதல் 20-ம் தேதி வரை நடக்க உள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/11062_thumb.jpg)
இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையர் வழங்கிய பிரத்யேகப் பேட்டியில், `சுய உதவிக் குழுவினரை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில, மாவட்ட, வட்டார அளவில் இதுவரை பல கண்காட்சிகளை நடத்தியுள்ளோம். இப்போது அதன் தொடர்ச்சியாக நவராத்திரி விற்பனைக் கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 50-க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர். மக்கள் அனைவரும் கண்காட்சியைக் கண்டுகளிப்பதுடன், தரமான பொருள்களை வாங்கி மகளிர் சுயஉதவிக் குழுவினரின் முன்னேற்றத்திலும் பங்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.