ஷிவமொகா, கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு 2020ல், கொரோனா தொற்று தீவிரமாக இருந்தது. அப்போது ஊரடங்கு அமலில் இருந்தது.
ஷிவமொகாவைச் சேர்ந்த ஒரு பெண், கொரோனா தொற்று பாதிப்பால், ‘மெக்கான்’ மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்று வந்தார். அவரை, 15 வயது மகள் உடனிருந்து கவனித்து வந்தார்.
மருத்துவமனை அருகில் கடைகள் எதுவும் இல்லை. உணவு, பால், பழங்கள் கிடைக்கவில்லை. 2020, டிசம்பர் 6ல், தாய்க்கு உணவு வாங்கி தர முடியாமல் சிறுமி பரிதவித்தார்.
அப்போது மருத்துவமனை வார்டு பாய் மனோஜ், 30, உணவு வாங்கி வரலாம் எனக் கூறி, சிறுமியை பைக்கில் அழைத்து சென்றார். சிறிது துாரம் சென்ற பின், நண்பர்கள் பிரஜ்வல், 28, வினய், 30, சந்தீப், 30, உடன் சேர்ந்து, சிறுமியை காரில் கடத்திச் சென்று, நால்வரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அதன்பின் மருத்துவமனை அருகில் சிறுமியை விட்டுவிட்டு தப்பினர். மயங்கி கிடந்த சிறுமியை, அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, நால்வரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் குற்றம் உறுதியானதால், இவர்களுக்கு தலா, 25 ஆண்டுகள் சிறை தண்டனை, 1.15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement