வெலிங்டன்,
நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள குயின்ஸ்டவுன் நகரம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது சாகச விளையாட்டுகளுக்கு பெயர் பெற்றது. எனவே தினந்தோறும் இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.
இந்த நிலையில் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் விமான நிலையத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
பின்னர் விமான நிலையம் மூடப்பட்டு மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். அதில் எந்த வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன்பிறகே இது பொய்யான தகவல் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து விமானங்கள் அங்கிருந்து பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.