வாகன விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் ஜாக்சன் ஆண்டனி இன்று (09) அதிகாலை காலமானார்.
1958 ஆம் ஆண்டு றாகமையில் பிறந்த அவர் தமது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவர் தமிழர்கள் மத்தியிலும் பரீட்ச்சியமான ஒரு சிறந்த கலைஞராக விளங்கியவர்.
நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பிற்காக அனுராதபுரம் பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, தலாவ வீதியில் மொரகொட பிரதேசத்தில் அவர் பயணித்த கெப் வண்டி யானை மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
அவர் ஒரு நடிகர், பாடலாசிரியர், பாடகர், எழுத்தாளர், அறிவிப்பாளர் மற்றும் வரலாற்று ஆய்வாளராக தனது மேதைமையை வெளிப்படுத்தினார், மேலும் இந்த நாட்டில் ஒரு சிறந்த பத்திரிகையாளராகவும் பணியாற்றினார்.
நாட்டின் கலாச்சார வரலாற்றை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சென்ற அவர், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல விருதுகளுக்கு உரித்தான ஜாக்சன் ஆண்டனி, தனது அனுபவத்தை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல மிகப்பெரிய தியாகம் செய்தார்.
‘பனாபத்ர குஹூம்புபெனியா’ அல்லது சிங்கள சினிமாவின் அயராத நடிப்பு ஆளுமை என்று அழைக்கப்படும் ஜாக்சன் ஆண்டனின் மறைவு இந்நாட்டின் கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.