இனி பயமில்லாமல் பரிவர்த்தனை செய்யலாம்… ஆர்பிஐ அறிவித்த புதிய வசதி என்ன தெரியுமா?

Reserve Bank Of India: இந்திய ரிசர்வ் வங்கி, Card-On-File டோக்கனைசேஷன் (CoFT) என்ற செயல்பாட்டை கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தியது. அதன் செயலாக்கம் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்கியது. இதுவரை, 56 கோடிக்கும் அதிகமான டோக்கன்கள் ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. டோக்கனைசேஷன் பரிவர்த்தனை என்பது பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஒப்புதல் விகிதங்களை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது.

டோக்கனின் நன்மைகள்

இந்த கார்டு டோக்கன் என்பது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு எண்ணுக்குப் பதிலாக குறிப்பிட்ட கார்டுக்கும், ஒரு வணிகருக்கும் குறிப்பிட்ட ஒரு தனித்துவமான டோக்கனைக் கொண்டு மாற்றுகிறது. இது அடிப்படையில் வாடிக்கையாளர்களின் கார்டுகளின் உண்மையான விவரங்களை மறைக்கும் என கூறப்படுகிறது. மேலும், இது வணிக இணையதளத்தில் இருந்து தரவு கசிவு ஏற்பட்டால் கார்டு விவரங்களை ஹேக்கர்கள் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது.

ஆன்லைன் பரிவர்த்தனைகள், பாயின்ட் ஆஃப்-சேல் பரிவர்த்தனைகள் அல்லது செயலி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு இந்த டோக்கன் பயன்படுத்தப்படலாம், மேலும் அவை மாறிக்கொண்டே இருக்கின்றன. அவை பரிவர்த்தனை செய்வதற்கான பாதுகாப்பான வழியாகவும் கருதப்படுகின்றன.

புதிய முன்மொழிவு

அந்த வகையில், வங்கிகள் வழங்கும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் மூலம் டோக்கன்களை உருவாக்குவதற்கான புதிய வசதியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) சமீபத்தில் முன்மொழிந்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள் விரைவில் தங்கள் வங்கியின் இணையதளம் அல்லது செயலியில் அவர்களின் கார்டு டோக்கன்களை உருவாக்க இயலும் என தெரிவிக்கப்படுகிறது. 

இப்போது, ஆன்லைனில் ஒரு வாடிக்கையாளர் ஷாப்பிங் செய்யும் போது, அவர் தனது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு விவரங்களை ஏதேனும் ஈ-காமர்ஸ் இணையதளம் அல்லது செயலியில் சேமிக்க நினைக்கலாம். அப்படி இருக்கையில், வாடிக்கையாளர் தான் வாங்கும் ஒவ்வொரு வணிகரின் இணையதளம் அல்லது செயலியிலும் புதிய கார்டு டோக்கன்களை உருவாக்க வேண்டும். 

வாடிக்கையாளர்களின் கவலையை போக்க…

இதன்மூலம், டோக்கனைசேஷன் செயல்முறையை நகல் எடுப்பது மற்றும் டோக்கன் பரிமாற்ற பாதுகாப்பு அபாயத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது. இ-காமர்ஸ் இணையதளங்கள் அல்லது செயலிகளில் கார்டு டோக்கன்களை உருவாக்கும் போது வாடிக்கையாளர்கள் டேட்டா பாதுகாப்பு குறித்து கவலை கொள்வார்கள். அந்த வகையில், வாடிக்கையாளர்களின் தேவையற்ற கவலைகளை நீக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய வசதி வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டு டோக்கன்களை சிறப்பாக நிர்வகிக்க அனுமதிக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அபாயம் குறையும்

Card-On-File டோக்கனைசேஷன் திட்டம் கடந்த அக்டோபர் 6 அன்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் முன்மொழிந்தார். அவர் முன்மொழியும்போது கார்டு டேட்டாவின் டோக்கனைசேஷன் அதிகரித்து வரும் நன்மைகள் போன்றவற்றை அவர் மேற்கோள் காட்டினார். தற்போது முன்மொழியப்பட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டதும், பயனர்கள் டோக்கன்களை உருவாக்கி, பல்வேறு இ-காமர்ஸ் செயலிகளை தங்கள் கணக்குகளுடன் இணைக்க அனுமதிக்கும் என தெரிகிறது. டோக்கனைசேஷன் செயல்முறை இப்போது பயனர்களுடைய வங்கிகளின் இணையதளங்கள் மற்றும் செயலிகளில் மட்டுமே நடப்பதால், தரவு மீறல் ஏற்பட்டால் மூன்றாம் தரப்பு போர்ட்டல்கள் உங்களின் முக்கியமான தகவல்களை அணுகும் அபாயத்தை இது குறைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.