கேங்டாக : சிக்கிமில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவித்த நான்கு பெண்கள் உட்பட, 56 பேரை, இந்தோ – திபெத்திய எல்லைப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், லாச்சென் பள்ளத்தாக்கில் சமீபத்தில் மேக வெடிப்பால் பலத்த மழை கொட்டியது.
இதனால், தீஸ்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுங்தாங் அணை உடைந்து, மங்கன், கேங்டாக், நாம்சி, பாக்யாலங் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கின.
இதற்கிடையே, சுங்தாங் பகுதியில் இந்தோ — திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அங்கு, பொதுமக்கள் சிக்கித் தவித்ததை பார்த்த படை வீரர்கள், கயிறு கட்டி அவர்களை பத்திரமாக மீட்டனர். இதில், நான்கு பெண்கள் உட்பட, 56 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்த 2,563 பேரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ள நிலையில், 30 நிவாரண முகாம்களில், 6,875 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
சிக்கிமில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உட்பட, 100க்கும் அதிகமானோர் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் ஒன்பது ராணுவ வீரர்கள் உட்பட, 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 122 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
ஆளில்லா விமானம் எனப்படும் ட்ரோன்கள், நவீன ரேடார்கள் மற்றும் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களின் உதவியுடன் அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதேபோல் வெள்ளப் பெருக்கில் முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளதால், சாலைப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளன. அவற்றை சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்