இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இந்து – பசுபிக் அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ஏன் – மெரி டெவிலியன் (Anne-Marie Trevelyan) மற்றும் தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் கலாநிதி நலேட் பெண்டோர் (Dr. Naledi Pandor) ஆகியோர் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (10) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது முதலாவதாக இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இந்து – பசுபிக் அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ஏன் – மெரி டெவிலியன் (Anne-Marie Trevelyan) ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் பொருளாதார மீட்சி உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான சட்டமூலம், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் மற்றும் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலம் உள்ளிட்ட சட்டவாக்க செயற்பாடுகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
இலங்கையில் தனியார் பல்கலைக்கழங்களை நிறுவுவதற்கான திட்டம் தொடர்பில் இராஜாங்க அமைச்சருக்கு தெளிவூட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய ராஜ்ஜியத்தின் பல்கலைக்கழகங்களும் இதனோடு இணைந்துகொள்ளுமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அதனையடுத்து தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் கலாநிதி நலேட் பெண்டோர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மேம்பாட்டிற்கு தென்னாபிரிக்கா வழங்கிய ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி அமைச்சரிடத்தில் நன்றி தெரிவித்தார். அது தொடர்பிலான சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவிருப்பதாகவும் வருட இறுதிக்குள் அதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான (IORA) வின் தலைமைத்துவத்தை வகிக்கும் காலப்பகுதியில் இந்து சமுத்திரத்தின் தனித்துவத்தை வலுப்படுத்துவதே இலங்கை நோக்கமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
வருடாந்தம் இரு தடவைகள் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் கூட்டமொன்றை நடத்த வேண்டுமெனவும், இந்து சமுத்திரம் தனித்துவமான அரசியல் அடையாளத்தை கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போராட்டம் தொடர்பில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையில் சமானதானத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற தென்னாபிரிக்காவின் கருத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்திக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொலம்பகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.